(மயூரன்)

நல்லூர் ஆலய வீதியில் செருப்புடன் நடமாடிய இருவரை பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற  பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவன் அனுமதித்துள்ளார். 

இந்த சம்பவம்  குறித்து மேலும் தெரியவருவதாவது , 

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.  அதனை முன்னிட்டு ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்கு வருகை தருவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை நேர திருவிழா முடிவடைந்த பின்னர் இரவு 8 மணியளவில் இரு இளைஞர்கள் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடியுள்ளனர்.

சிவில் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அதனை கண்ணுற்று இரு இளைஞர்களையும் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் , யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைத்து இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர். 

அதன் போது , குறித்த இருவரும் ஆலய வீதியில் செருப்புடன் சென்றதாகவும் , அதனால் அவர்களிடம் ஆள் அடையாள அட்டையை காண்பிக்க கேட்ட போது அதனை அவர்கள் காண்பிக்கவில்லை என பொலிஸார் குற்றச்சாட்டை முன் வைத்தனர். 

அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி உ .ரவிசங்கர் ஆலய நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட ஒழுங்கு விதியினை சட்டமாக்கி கைதுசெய்யும் அதிகாரம் பொலிசாருக்கு உண்டா ? என மன்றில் கேள்வி எழுப்பினார். 

அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த பதில் நீதிவான் குறித்த இரு இளைஞர்களையும் பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.