(எம்.மனோசித்ரா)
இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய பிரஜையொருவரின் மாதிரியிலேயே தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவும் பி.1.617 வைரஸ் முதன்முதலாக இனங்காணப்பட்டது. குறித்த இந்திய பிரஜை தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால் அவர் ஊடாக இந்த வைரஸ் சமூகத்திற்குள் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது என தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து , தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னர் எம்மால் விடுவிக்கப்பட்டுள்ள வேறு நபர்கள் ஊடாக இந்த வைரஸ் சமூகத்தில் பரவியுள்ளதா என்பது எமக்கு தெரியாது. எனவே இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பிரத்தியேக பரிசோதனை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இந்தியாவில் பரவும் வைரஸ் அண்மையில் இலங்கையிலும் இனங்காணப்பட்டது. இந்த வைரஸ் இந்தியாவில் மாத்திரமின்றி இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இனங்காணப்பட்டுள்ளது. இந்த அபாயம் இலங்கைக்கும் காணப்படுகிறது. இந்தியாவிலிருந்து வரும் நபர்கள் ஊடாக இந்த வைரஸ் இலங்கைக்குள் வரக்கூடும். அது மாத்திமின்றி பிரிதொரு நாட்டுக்குச் சென்று , அங்கு இந்த வைரஸ் காணப்படுமாயின் அதன் மூலமும் இலங்கைக்கு வரக்கூடும். இதனை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தப்படுவது மாத்திரமின்றி , வைரஸ் தன்மை குறித்து அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கான மாதிரிகள் எம்மால் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் பரிசோதனையின் ஊடாகவே இந்தியாவிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய பிரஜையின் மாதிரியில் இந்த வைரஸ் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

உண்மையில் இது நாம் எதிர்பார்க்க வேண்டியதொரு விடயமாகும். எவ்வாறிருப்பினும் தொற்றாளர்களாகவே இவர்களை சமூகமயப்படுத்துவதை நாம் தடுக்கின்றோம். இதில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளே முக்கிய இடம்பிடிக்கின்றன. முதன்முதலாக இந்திய வைரஸ் இனங்காணப்பட்டநபர் சமூகத்திலிருந்து இனங்காணப்பட்டவர்கள் அல்ல. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபராவார். குறித்த நபரின் மாதிரியில் இந்திய வைரஸ் இருப்பது தாமதமாகவே இனங்காணப்பட்டது.

இவ்வாறு இந்திய வைரஸ் இனங்காணப்படும் போது குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு, தொற்றுறுதி செய்யப்பட்டதன் பின்னர் சிகிச்சை பெற்று , தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்ததன் பின்னர் , மீண்டுமொரு பி.சி.ஆர். பரிசோதனைக்கும் உட்படுதப்பட்ட பின்னரே இவரது மாதிரியில் இந்திய வைரஸ் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. எனவே இந்த வைரஸ் சமூகத்தில் பரவக் கூடிய நிலைமை காணப்படவில்லை.

எவ்வாறிருப்பினும் இதே போன்று எம்மால் விடுவிக்கப்பட்ட வேறு நபர்கள் ஊடாக இந்த வைரஸ் சமூகத்தில் இருக்கின்றதா என்பது எமக்கு தெரியாது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடத்தில் இந்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அமைச்சினால் வாரந்தம் மாதிரிகள் ஆய்வுகூடங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏதேனுமொரு வகையில் இந்த வைரஸ் சமூகத்தல் பரவியுள்ளதா என்பதை இனங்காண்பதற்காக தொடர்ச்சியான இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.