(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே அனைத்து கட்சி தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வகட்சி தலைவர் கூட்டத்தை விரைவாக நடத்துவது சிறந்ததாகும் என ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளன.

பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் வினவிய போதே , பங்காளி கட்சி தலைவர் இவ்வாறு வலியுறுத்தியதாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே அனைத்து கட்சி தலைவர்களையும் உள்ளடக்கிய சர்வ கட்சி தலைவர் கூட்டத்தை விரைவாக நடத்துவது அவசியமாகும் என இதன் போது பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.பிரதமர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கூட்டணியின் உள்ளக விவகாரம் குறித்து பேசப்படவில்லை. அதற்கான தருணம் இதுவல்ல.

கொவிட் -19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல் மற்றும் செலுத்தல் ஆகிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அவசியமாகும். அத்துடன்  கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  பொருளாதார ரீதியில் நிவாரணம் வழங்குவது குறித்து உரிய திட்டங்களை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தல், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தியதாக இக்கூட்டம் அமைந்திருந்தது. கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட ஒரு சில நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்பட்டமை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டன. தற்போதைய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அவசியம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

புதிதாக வகுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் தெளிவுப்படுத்தப்பட்டன. கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளல் மற்றும் செலுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமாகும்.

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெறுவது அவசியமாகும். இதற்கு சர்வ கட்சி தலைவர் கூட்டத்தை விரைவாக ஏற்பாடு செய்வது அவசியம் என்ற கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்துள்ளோம்.

கொவிட் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் குறித்து முறையான திட்டங்களை வகுக்குமாறு பிரதமர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

கொவிட் வைரஸ் தாக்கம் குறித்து அனைத்து தரப்பினரும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்ற காரணத்தினால் கூட்டணியின் உள்ளக விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றார்.