அமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் இயக்குநரகமான 'கொலோனியல் பைப்லைன்' ஐந்து நாள் செயலிழப்பின் பின்னர் புதன்கிழமை மீண்டும் படிப்படியாக செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

தென்கிழக்கு அமெரிக்க நேரப்படி மாலை 5 மணிக்கு எரிபொருள் விநியோகத்தை மறுதொடக்கம் செய்யத் தொடங்கியதாக இக்குநகரகம் கூறியது, ஆனால் முழுமையான விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்ப பல நாட்களாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

பணயத் தீநிரல் (Ransomwar) சம்பந்தப்பட்ட சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டதன் விளைவாக கொலோனியல் பைப்லைன் எரிபொருள் விநியோக செயற்பாடுகளானது முற்றிலுமாக செயலிழந்தன.

நிறுவனம் டெக்சாஸிலிருந்து நியூ ஜெர்சி வரை 8,850 கி.மீ (5,500 மைல்) க்கும் அதிகமான நீளமுள்ள ஒரு குழாய் வலையமைப்பை இயக்குகிறது.

கொலோனியல் பைப்லைன் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய் பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை அதன் வலையமைப்பு முழுவதும் கொண்டு செல்கிறது.

மேலும் இது அமெரிக்க கிழக்கு கடற்கரை எரிபொருள் விநியோகத்தில் 45 சதவீதத்தை கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் இயக்குநரகத்தின் ஐந்து நாள் செயலிழப்புக் காரணமாக அமெரிக்கா முழுவதும் எரிபொருள் விநியோகங்கள் பாதிக்கப்பட்டதுடன், விலைகளும் உயர்வடைந்து பல மாநிலங்கள் அவசரநிலையை அறிவித்தன.

புளோரிடா, வர்ஜீனியா, வட கரோலினா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அனைவரும் அவசரகால நிலைகளை அறிவித்துள்ளனர். இதன் விளைாவக அவர்கள் தங்கள் பகுதிகளில் விலையை குறைக்க தற்காலிக விதிகளை அறிமுகப்படுத்த முடியும்.

'Ransomware' சைபர் தாக்குதலுக்குப் பின்னால் டார்க்சைட் என்ற குற்றவியல் கும்பல் இருப்பதாக எஃப்.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.

அதேநேரம் ஹேக்கர்கள் கோரிய மீட்கும் தொகையை செலுத்த மாட்டோம் என்று கொலோனியல் பைப்லைன் இயக்குநரகம் கூறியுள்ளது.