(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு இம்மாதம் 31 ஆம் திகதி வரை வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் சகல பிரஜைகளினதும் தனிமைப்படுத்தல் காலத்தில் இவ்வாறு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுநிரூபத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்ற இலங்கை பிரஜைகள், வெளிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட சகலரும் 14 நாட்கள் நிச்சயம் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். அத்தோடு இவ்வாறு வருகை தருபவர்கள் ஏதேனுமொரு வகையில் கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்பினைப் பேணியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டால் அல்லது இனங்காணப்பட்டால் அவ்வாறானவர்களின் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் 2 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட மாட்டாது. மேலும் எந்தவொரு நாட்டிலும் 2 கட்டங்களிலும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களானாலும் இலங்கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் , தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாயினும் 7 நாட்கள் மாத்திரமே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு முன்னைய சுற்று நிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.