இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களைப் பாதித்து வருகிறது.

இந்தநிலையில்,  கொரோனா தொற்றில் இருந்து குணமான, குணமாகும் நோயாளிகளுக்கு, ‘மியூகோர்மைகோசிஸ்’ என அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவதை வைத்தயர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது ஒரு அரிதான மற்றொரு தொற்று நோய் ஆகும்.

பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இந்த நோய் உயிருக்கு ஆபத்தானது.

கொரோனா நோயாளிகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் இந்த நோய் தூண்டப்படலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டீராய்டுகளைப் பொறுத்தமட்டில், அவை கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து,கொரோனாவை எதிர்த்துப்போராட உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகளவில் செயல்படுகிறபோது, ஏற்படுகிற சில சேதங்களை தடுக்கின்றன. ஆனால் அவை நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு இல்லாத பிற கொரோனா நோயாளிகளின் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன.

நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதுதான் கொரோனா நோயாளிகளின் மியூகோர்மைகோசிஸ் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நோய் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்ததும் இதற்கான மருந்து தயாரிப்பை அதிகரிக்க இந்திய மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் இப்போது கருப்புபூஞ்சை நோய் பரவல் இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.