உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் அரங்குகளில் நிலைநாட்டப்படும் மிகவுயர்ந்த சாதனைகளுக்கான விருதாக திகழும் “ டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள்  2016 ” நிகழ்வு அண்மையில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு எதிர்வரும் செப்டெப்பர் மாதம் 21 ஆம் திகதி  கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

வீரர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 24 ஆம் திகதி நண்பகல் 12 மணியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் டயலொக் ஆசிஆட்டா ஆகியன கூட்டாக இணைந்து இதனை அறிவித்தன.

“ எமது சிங்கங்கள் ” எனும் தொனிப்பொருளில் நட்சத்திர வீரர்களையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் எமது வீரர்கள் படைத்த சாதனைகளையும் அங்கீகரிந்து கௌரவிப்பதாக குறித்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.

கடந்த வருடத்தில் இடம்பெற்றதைப்போன்றே, “ஆண்டின் மிகச் சிறந்த டயலொக் மக்கள் வீரர் ” விருதுக்காக மக்கள் வாக்களிக்க முடியும்.

எந்தவொரு கையடக்கத் தொலைபேசி வலையமைப்பிலிருந்தும்  DPP <இடைவெளி >வீரரின் பெயர் என டைப்செய்து 2343 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைப்பதன் மூலம் மக்கள் வீரரை தெரிவுசெய்ய முடியும்.  அல்லது www.cricketawards.online என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தம்முடைய வாக்குகளை அனுப்பி வைக்கமுடியும். இதில் முன்மொழியப்பட்ட வீரர்களின் விபரங்கள் அடங்கிய அல்பம் டயலொக் பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் . அதில் தாம் தெரிவுசெய்யும் வீரர்களின் பெயருக்கு கீழே “லைக்” (Like )  செய்வதன் மூலம் வாக்களிக்க முடியும்.

இதேவேளை, விருது விழாவின் போது, “ஆண்டின் மிகச் சிறந்த டயலொக் வீரர் விருது ”, “ஆண்டின் வளர்ந்துவரும்  கிரிக்கெட் வீரர் விருது” , “ ஒவ்வொரு தொகுதியிலும் முன்னணி நடுவருக்கான விருது”  உட்பட பல விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் விருதுகள் - 2016 க்கு வலுவூட்டுவதில் டயலொக் ஆசிஆட்டா பெருமையடைவதாக டயலெக் குழுமத்தின்  வர்த்தக நாமம் மற்றும் ஊடக பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கிரிக்கெட் விருதுகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடக வீரர்களின் திறமைகளுக்கு வலுவூட்டுவதில் நாம் பெருமையடைகின்றோம்.

இவ்விருது வழங்கலுக்காக மீண்டும் ஒருதடவை இலங்கை கிரிக்கெட் உடன் பங்காளியாக இணைந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

வீரர்களை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நாளை 24 ஆம் திகதி நண்பகல் 12 மணியில் இருந்து செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.