சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 448 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 8,747 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் தொடர்பாக மேல் மாகாணத்தில் நேற்று பல சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி மேல் மாகாணத்தில் உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு நிலயைங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் ஆகியவை நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போதே 1,597 நபர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாகவும், 25 பேர் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டதாகவும் அஜித் ரோஹன கூறினார்.

அதேநேரம் கொழும்பிலிருந்து வெளியேறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 352 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது 1,921 வாகனங்களில் பயணித்த 3,846 நபர்கள் மீது சோதனை முன்னெடுக்கப்பட்டது.