இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இராணுவ பிரிவு ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளமையினால் இதுவரை 70 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 69 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூறியுள்ளனர்.

அதேநேரம் காசாவிலிருந்து ரொக்கெட்டுகள் வீசியதன் விளைவாக, ஏழு இறப்புகளையும் 200 க்கும் மேற்பட்ட காயங்களையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய படைகள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் காசா பகுதியில் கடும் குண்டுவீச்சு வியாழக்கிழமை அதிகாலை தொடர்ந்தது.

ஹமாஸ் அதன் காசா நகர தளபதி பாஸ்ஸெம் இசா, இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பொலிஸ் கட்டிடங்களுக்கு மேலதிகமாக பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கு சொந்தமான தளங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியதாக பாலிஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

காசாவின் சுகாதார அமைச்சகம் சமீபத்திய தாக்குதலின் தொடக்கத்திலிருந்து 17 சிறுவர்கள், எட்டு பெண்கள் உட்பட மொத்தம் 69 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 390 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வியாழக்கிழமை அறிவித்தது.

முற்றுகையிடப்பட்ட கடலோரப் பிரதேசத்தில் 14 மாடிக் கட்டிடத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் அழித்ததை அடுத்து, காசா பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொடிய ரொக்கெட் தாக்குதல்களை கட்டவிழ்த்தது.

இதன் விளைவாக ஆறு வயது சிறுவன் உட்பட மொத்தம் 6 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் காசாவிலிருந்து இஸ்ரேலின் பல்வேறு இடங்களுக்கு சுமார் 1,500 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாகக் கூறியுள்ளது.

அதேநேரம் பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் யூத இஸ்ரேலியர்களுடன் மோதிக்கொண்ட நிலையில், இஸ்ரேலுக்குள் இனங்களுக்கு இடையிலான வன்முறைகளும் பதிவாகியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக இன்னும் பன்முகப்படுத்தப்பட்ட பதிலடி தொடரும் என்றும், பாலஸ்தீனியர்களைப் பாதுகாப்பதற்கான தனது போராட்டத்தை தனது குழு முன்னெடுக்கும் என்று ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் ஹசீம் கஸ்ஸெம் உறுதியாக கூறியுள்ளார்.

இந் நிலையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் மற்றும் பல நாட்கள் எல்லை தாண்டிய விரோதங்களுக்கு மத்தியில் ஜெருசலேமில் உள்ள முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் கொண்டாடும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி இஸ்லாமிய நாட்காட்டியில் பிரார்த்தனை மற்றும் நோன்பின் ஒரு மாதமான புனித ரமழான் மாதத்தின் முடிவான ஈத் அல்-பித்ரைக் கொண்டாட பிரார்த்தனைகளில் இணைய முஸ்லிம் வழிபாட்டாளர்கள் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்கு வெளியே கூடிவருகிறார்கள்.

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்களை முன்னதாக ரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.