(செ.தேன்மொழி)

பெருந்தோட்ட பகுதிகளில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு, நாட்டின் ஏனைய பகுதிகளில் முடக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலில் ஈடுபடும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வலியுறுத்தினார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழiமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறியதாவது ,

கொவிட்-19 உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இலங்கையிலும் தீவிரமாக பரவலடைந்து வருகின்றது.

பெருந்தோட்ட பகுதிகளில் கொவிட் வைரஸ் தொடர்பில் அடிப்படை வசதிகள் கூட செய்துக் கொடுக்கப்படாத நிலையில் , வைரஸ் பரவலுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். மலையகத்தில் ஒரு தோட்டத்தில் கூட இதுவரையில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் செய்யப்படவில்லை.

அரச துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்கள் பணிக்குச் செல்ல தேவையில்லை என்றும் அவர்களுக்கு விடுமுறையுடன் ஊதியமும் வழங்கப்படும் என்று சுற்று நிறுபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் , பெருந்தோட்டங்களில் பணிபுரிந்து வரும் கர்ப்பிணி பெண்கள் இயந்திரங்களா ?, அவர்கள் தொழிலுக்குச் சென்றால் மாத்திரமே ஊதியம் வழங்கப்படுகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை பின்பற்றப்பட்டால் , அவர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். தொழில் அமைச்சு அல்லது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாகவோ அதனை அரசாங்கம் செய்திருக்கலாம்.

கர்ப்பிணி அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்று நிறுபத்தில் தொழிலுக்கு வருகைத்தர முடியாதவர்கள் , தேவை ஏற்படின் இணையத்தின் ஊடாக பணிபுரிய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சாத்தியமாகுமா? அதனால் , அரசாங்கம் அனைவருக்கும் சமமான சட்டத்திட்டங்களை மாத்திரமே செயற்படுத்த வேண்டும்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை அரசாங்கம் மாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்படுத்த வேண்டும்.

வைரஸ் பரவல் காரணமாக பல தோட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , முடக்கப்பட்டுள்ள நகர்புறப்பகுதிவாழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து வசிகளும் , மலையகத்தில் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

இல்லை என்றால்,  வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை விட உணவின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.அரசாங்கத்திற் கொள்கையை மீறிய செயற்பாடுகள் பெருந்தோட்ட பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய  வெள்ளையர்களின் காளனித்துவ நிர்வாக முறைக்கேற்ப கம்பனிகள் செயற்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தின் போது உரையாற்றவும் எதிர்பார்த்துள்ளேன். வைரஸ் பரவலின் காரணமாகவே  பெருந்தோட்ட மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள்.

இல்லை என்றால் அவர்கள் வீதிக்கு இறங்கி போராடுவதை யாராளும் தடுத்திருக்க முடியாது. அதற்கமைய ஒவ்வொரு பெருந்தோட்ட தொழிலாளர்களும் ஒரு தொழிற் சங்கத்தில் உறுப்புரிமை பெற்றிருக்க வேண்டும். அப்போதே அவர்களது உரிமைகளை வென்றெடுக்க கூடியதாக இருக்கும்.