உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மக்களும் இதிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஏராளமான நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். 

எத்தகைய சிகிச்சையை மேற்கொண்டாலும் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க எம்முடைய உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள். 

இதற்காக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை தொடர்ச்சியாக அவதானிக்கத் தொடங்குகிறார்கள். அதிலொன்று தான் மாட்டுச்சாண சிகிச்சை.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க எம்முடைய உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்காக வட இந்தியாவில் உள்ளவர்கள் மாட்டுச்சாணத்தை பூசிக்கொண்டு சிகிச்சையில் ஈடுபடுகிறார்கள்.  

இந்தச் செய்தி சமூக வலைத்தளம் மூலம் பரவ, இத்தகைய மாட்டுச்சாண சிகிச்சையை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இல்லாத இத்தகைய சிகிச்சையில் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

வட இந்திய மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ சுவாமி நாராயண் குருகுல் வித்யா பிரதிஷ்டான் சார்பில் நடத்தப்படும் கோசாலையில் சேகரிக்கப்பட்டிருக்கும் மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு பால் அல்லது தண்ணீரால் சுத்தப்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றை எதிர்க்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் இத்தகைய மாட்டு சாண சிகிச்சையில் பங்குபற்றி, கொரோனாத் தொற்றிலிருந்து குணம் அடைந்ததாகவும் சமூக வலைதளம் மூலமாக செய்திகள் வெளியானது.

ஆனால் மாட்டு சாண சிகிச்சையானது கொரோனாத் தொற்றுக்குரிய எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

அத்துடன் 'மாட்டின் உடலிலுள்ள கழிவு தான் மாட்டு சாணம். அதனை உடலில் பூசுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க போவதில்லை. 

இதுபோன்ற சிகிச்சைகளுக்கு செல்வதற்குமுன் மருத்துவர்களின் விளக்கத்தையும், கருத்துகளையும் கேட்கவேண்டும். ஏனெனில் இதுபோன்ற அறிவியல்பூர்வமான ஆதாரமில்லாத சிகிச்சையால் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு வேறு விதமான பாதிப்புகள் உருவாகி விடும். 

அதனால் மக்கள் இது போன்ற சிகிச்சைகளின் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்' என கேட்டுக் கொண்டுள்ளனர்.

டொக்டர் ஆர்த்தி.
தொகுப்பு அனுஷா.