(எம்.எம்.சில்வெஸ்டர்)

கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச ஹொக்கி சம்மேளத்தின் நிறைவேற்று உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அணிக்கு ஐந்து பேர் கொண்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டி நடத்துவது குறித்து  தீர்மானிக்கப்பட்டது. 

இந்தத் தீர்மானத்தின்படி அணிக்கு ஐந்து பேர்கொண்ட உலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் முதலாவது அத்தியாயம்  எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளனர்.

இந்தக் கன்னி உலகக் கிண்ணப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஹொக்கி சம்மேளனம் சட்ட வரைபு ஒன்றை சர்வதேச ஹொக்கி சம்மேளன சட்டத்தில் இணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

வரவேற்பு நாட்டுக்கு மேலதிகமாக அந்தத் பிராந்திய வலயங்களில் தகுதி பெறும் நாடுகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுக்கொள்ளும்.

5 பேர் கொண்ட ஹொக்கி உலகக் கிண்ணத் தொடரை அறிமுகப்படுத்தி வைப்பதன் ஊடாக சர்வதேச ரீதியாக ஹொக்கி விளையாட்டை  மேலும் முன்னேற்ற முடியும் என்பதுடன், பிரசித்திப் பெறவைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது சர்வதேச ஹொக்கி சம்மேளனம்.

மேலும் ஹொக்கி விளையாட்டில் முன்னிலையில் உள்ள அணிகளைத் தவிரவும், வளர்ந்துவரும் அணிகளையும் ஐந்து பேர் கொண்ட உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.