(எம்.எம்.சில்வெஸ்டர்)

பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்துக்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் (11) வழங்கியதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன் தெரிவித்தார்.

அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் பெரேராவின் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கு உப தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார். 

எதிர்வரும் 16 ஆம் திகதியன்று இலங்கை கிரிக்கெட் குழாம் பங்களாதேஷ் நோக்கி பயணமாகும் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

 

இலங்கை அணித் தலைவராக செயற்பட்டு வந்த திமுத் கருணாரட்ண மற்றும் முன்னாள் தலைவர்களான எஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமால் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் இல்லாமல் இலங்கை அணி பங்களாதேஷ் செல்லவுள்ளது.

இந்த கிரிக்கெட் சுற்றுலாவில் எதிர்வரும் 21 ஆம் திகதி பயிற்சிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி, 23 , 25, 28 ஆம் திகதிகளில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணியை சந்திக்கவுள்ளது.

இப்போட்டித் தொடருக்காக பயணமாகவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாத்தினரை நேற்றைய தினம் (11) உயிரியல் வலயத்துக்குள் (பயோ பபிள்) வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த குழாத்தில் இடம்பிடித்த லக்சான் தனஞ்சய மற்றும் இஷான் ஜயரட்ன இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதால், இவ்விருவரும் இந்த பயே பபிள் முறைக்கு உள்வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் குழாம் விபரம்

குசல் ஜனித் பெரேரா (அணித்தலைவர்), குசல் மெண்டிஸ் (உப அணித்தலைவர்), தனுஷ்க குணதிலக்க, பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தசுன் சானக்க, இசுரு உதான, வனிந்து ஹசரங்க, துஷ்மன்த்த சமீர, அஷேன் பண்டார, ரமேஷ் மெண்டிஸ், லக்சான் சந்தகேன், அக்கில தனஞ்சய, சாமிக்க கருணாரட்ண, அசித்த பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ