(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கையில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்று மரணம் தொடர்பில் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விடயத்தின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக எமது சங்கத்தினால் குறித்த பல்கலைக்கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் நவீன் டி  சொய்சா தெரிவித்தார்.

தற்போது நிலவுகின்ற கொவிட் 19 பரவல் காரணமாக இந்த ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று மரணங்களிள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்படி விவகாரத்தின் நம்பகத்தன்மை குறித்தும், அது எந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டமை குறித்தும் தெளிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில் தமது சங்கத்தின் மத்திய செயற்குழுவின் ஊடாக வொஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுப் பரவல் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.  பாரிய சிக்கல் நிலையில் இல்லாத கொரோனா தொற்றாளர்களை வீட்டுக்குள் வைத்து தீவிர வைத்திய கண்காணிப்பின்கீழ் சிகிச்சையளிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம்.

சில நிபந்தனைகளுக்கு அமைவாக கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளித்து வருவதுடன், பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தொற்றாளர்களை உடனடியாக வைத்தியாசாலைக்கு கொண்டு வருவதற்கு பதிலாக உடனடியாக மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் தெரிவித்திருந்தோம்.

பி.சி.ஆர் முடிவுகளை பெற்றுக்கொண்டு சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு தொற்றுநோயியல் பிரிவினால் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதிக்கு எமது சங்கம் தெரிவித்துள்ளது என்றார்.