(செ.தேன்மொழி)

நாட்டில் 60 சதவீதமானவர்களுக்கேனும் தடுப்பூசிகளை ஏற்றுவதன் ஊடாகவே வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

இவ்வாறான நிலையில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விபரங்களை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

Articles Tagged Under: எஸ்.எம்.மரிக்கார் | Virakesari.lk

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறியதாவது ,

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடினோம்.

இதன்போது வைத்திய சங்கத்தினர் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் எம்மை தெளிவுப்படுத்தினர். குறுகியகால நடவடிக்கை மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுபாடுகள் தொடர்பிலும் தெரிவித்தனர். 

வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து சுகாதார தரப்பினரினால் தயாரிக்கப்பட்ட புத்தகமொன்று இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மக்கள் விளக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் அதனை அச்சிட்டு அவர்களுக்கு வழங்கவேண்டும்.

இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முயற்சியையும் எடுக்காது இருக்கும் நிலையில் , பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி என்ற வகையில் எமது செலவில் , மும்மொழியிலும் அச்சிட்டு மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய அதன் ஆரம்பக்கட்டமாக கொழும்பு மற்றும் கொலன்னாவ பகுதி வாழ் மக்களுக்கு வழங்கவுள்ளோம். 

வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்  கொடுப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

உலகலாவிய ரீதியில் வைரஸ் தொற்று 3 சதவீதமாக குறைவடைந்து வருகின்ற நிலையில், எமது நாட்டில் மட்டும் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான காரணம் என்ன ? தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார்.

12 இலட்சம் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் நாட்டுக்கு எடுத்து வரப்பட்ட போதிலும் , 6 இலட்சம் பேருக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இவர்களுக்கு ஸ்புட்னிக் அல்லது சைனோபார்ம் தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக , அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி ஒன்றிணைந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுக்க வேண்டும். எனினும் தடுப்பூசிகள் இன்றி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது.

கொரோனா நிதியத்துக்கு 1360 மில்லியன் ரூபாய் பணம் கிடைக்கப்பெற்றிருந்தது. ஒருவருடகாலமாக அந்த பணத்தை எதற்கும் பயன்படுத்தமல் இருந்தவர்கள் , தற்போது தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு முன்னால் பொய்யுரைப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். சைனோபார்ம் , ஸ்புட்னிக் மற்றும் அஸ்ட்ரசெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகள் எந்தளவில் பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். கிடைக்கப்பெறும் நிவாரண நிதிகள் தொடர்பிலும் தெளிவுப்படுத்த வேண்டும்.

ரமழான் பண்டிகையின் போது பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

எனினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் தொழில் புரிந்து வருபவர்களுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் அவர்களது குடும்பத்தினருடனாவது இணைந்து பண்டிகையை கொண்டாடுவதற்கான வசதிகளை செய்துக் கொடுக்குமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.