குருந்தூரில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி இராணுவப் பாதுகாப்புடன் பௌத்த மயமாக்கல் செயற்பாடு தீவிரம்; சுகாதார நடைமுறைகளை மீறிய இராணுவத்திற்குரிய நடவடிக்கை என்ன - ரவிகரன் கேள்வி 

தமிழர்களின் பூர்வீக முல்லைத்தீவு - குருந்தூர்மலைக்கு, கடந்த 10.05.2021அன்றிலிருந்து பௌத்த பிக்குகள், இரணுவத்தினர், உள்ளிட்ட பலரும் பாரிய அளவில் செல்வதாகவும் அங்கு பாரிய அளவில்நிகழ்வொன்று இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணிகள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரனிடம் தெரியப்படுத்தியிருந்தனர். 

அத்தோடு என்றுமில்லாதவாறு ஆறுமுகத்தான்குளம், தண்ணிமுறிப்புப் பகுதிகளில் இராணுவம் பாதுகாப்புக்கடமைகளில் ஈடுபடுவதாகவும், அவ்வாறு பாதுகாப்புக்கடமையிலுள்ள இராணுவத்தினர் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளிலுள்ள வயல் நிலங்களுக்கு  செல்பவர்களை வழிமறிப்பதாகவும் மக்களால் மேலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 11.05.2021 இன்று குருந்தூர் மலைப் பகுதிக்குச் சென்ற ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் அங்குள்ள நிலைமைளைப் பார்வையிட்டனர். அப்போது அங்கே இராணுவத்தினர் கொவிட் - 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பில் ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ரவிகரன், கொவிட் - 19 சுகாதார நடைமுறைகளுக்கு மாறாக யாராவது செயற்பட்டாலோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாராவது செய்ய முற்பட்டாலோ தராதரமின்றி அனைவரையும் கைதுசெய்வோம் என இராணுவத் தளபதி அறிக்கைகளை வெளியிட்டிருக்கும் நிலையில், இங்கு இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்படுகின்றனர். எனவே இவர்களுக்குரிய நடவடிக்கை என்ன என அவர்கேள்வி எழுப்பினார்.