(இராஜதுரை ஹஷான்)
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தடுப்பூசிகளை செலுத்துவது தொடர்பில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்குத் தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதனூடாக விரைவாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னெடுக்க முடியும்.

இதனூடாக தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நபர்கள் பின்தொடர முடியும், நாட்டுக்குள் தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுவதையே புதியத் தலைமுறையினர் எதிர்பார்க்கின்றனர். இதனை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம்.

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தையும், சமூக வாழ்வியல் முறைமை குறித்தும் அதிக அவதானம் செலுத்துவது அவசியமாகும். கொவிட் -19 தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துக்கு நாட்டு மக்கள்  பொது நோக்குடன் ஆதரவு வழங்க  வேண்டும் என்றார்.