(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட்டை கட்டுப்படுத்த  பயன்படுத்தப்படும் முறைமைகளை மீளாய்வு செய்வதற்கு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாட கொவிட் தொழிநுட்ப குழுவை கூட்டி பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்று நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் மூன்றாவது அலைக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளவும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் முறைமைகள் தொடர்பில் மீளாய்வு செய்வது தொடர்பில்  ஆராயவும் சுகாதார அமைச்சின் கொவிட் தொழிநுட்ப குழுவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்று நேற்று ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தலைமையில் இடம்பெற்றுள்ளது.  சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன்போது  கொவி்ட் மூன்றாம் அலையில் நோய் பரவும் வேகம், பீ.சீ.ஆர். பரிசோதனை, தனிமைப்படுத்தல், வைத்தியசாலைகளுக்கு அனுமதித்தல், இடம்பெறும் மரண வீதங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், தற்போது தனிமைப்படுத்தும் முறைமையை மீள் பரிசீலனை செய்துள்ளதுடன் தற்போதைய அபாய நிலைமையின் அடிப்படையில் இதற்கு முன்னர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முறைமைக்கு பதிலாக, ஆரம்பத்தில் செயற்படுத்தப்பட்ட வழிகாட்டல்களை மீண்டும் செயற்படுத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கொவிட் கட்டுப்படுத்தும் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முறையாக கண்காணிப்பதற்கான முறையொன்றை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அதற்காக மருத்துவ பட்டதாரிகளின் சேவையை பெற்றுக்கொள்ளவும் கலந்துரையாடப்பட்டது. அதற்கான தொலைபேசி இயக்க கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதன் தேவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் ஊடாக மக்களுக்கு அறிந்துகொள்ள  தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.