(எம்.எப்.எம்.பஸீர்)
சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின்  மீளாய்வு மனு மீதான  விசாரணைகளை அவசர நிலைமையாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் எனக் கூறி நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிரேஷ்ட  சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவால் இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நகர்த்தல் பத்திரத்தை பரிசீலிப்பதிலிருந்து தனிப்பட்ட காரணிகள் காரணமாக விலகிக் கொள்வதாக நீதிபதி மேனகா அறிவித்தார். அதன் படி அந் நகர்த்தல் பத்திரம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதிய நீதிபதிகள் குழாம் முன் பரிசீலிக்கப்படவுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அத்திணைக்களத்தின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய மறுத்த, கம்பஹா மேல் நீதிமன்றின் தீர்மானத்தை வலு இழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த  மனு பரிசீலனைக்கு அப்பொது வந்திருந்தது. அதன்போது சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஷனில் குலரத்ன ஆஜராகியிரிந்தார்.

 இந்நிலையிலேயே இம்மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் மன்றில் சமர்ப்பிக்க சட்ட மா அதிபருக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம்  ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து ( மே 6 ஆம் திகதிக்கு முன்னர்) வழக்கினை எதிர்வரும் மே 13 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுப்பதாக அறிவித்தது. 

ஏனினும் சட்ட மா அதிபர் சார்பில் ஆட்சேபனைகள் குறித்த திகதிக்குள் முன் வைக்கப்படவில்லை. அதனையும், கொவிட் நிலைமையையும் மையப்படுத்தி குறித்த மனு தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதை தவிர்க்கும் முகமாக , மனுவை விஷேட, அவசர மனுவாக ஏற்று தீர்மானம் எடுக்க நகர்த்தல் பத்திரம் ஊடாக கோரப்பட்டுள்ளது.

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட  8 பேருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வெலிவேரிய பகுதி ஆயுத கிடங்கு விவகார விசாரணைகளில், சந்தேக நபர்களைக் கைது செய்ய புதிதாக சாட்சியங்களை உருவாக்கியதாக கூறி, இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கம்பஹா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த பிணை மனு கடந்த 2020  டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே, மேல் நீதிமன்றின் உத்தரவை மீளாய்வு செய்து தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஷானி அபேசேகர, சுகத் மெண்டிஸ் சார்பில் மேன் முறையீட்டு மன்றில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.