தற்போது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டில் பரவிய கொரோனாத் தொற்றின் முதல் அலையை விட, இரண்டாவது அலையில் வீரியமிக்க உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கிருமி காணப்படுகிறது.

இவை நுரையீரலைக் காட்டிலும் இதயத்தை அதிக அளவில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில்,

' கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட சற்று வீரியத்துடன் காணப்படுகிறது.

சிலருக்கு காய்ச்சல், இருமல், சளியை விட தலைவலி அதிகமாக ஏற்படுகிறது. அத்துடன் உடல் சோர்வும் அதிகமாக உண்டாகிறது.

கொரோனாத் தொற்றின் முதல் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சேதமடைந்தது. தற்போது வீசும் இரண்டாவது அலையில் நுரையீரல் பாதிக்கப்பட்டாலும், அதனை விட அதிக அளவில் இதயம் பாதிப்புக்குள்ளாகிறது.

இதனால்தான் வயதானவர்களை விட மத்திம வயது உள்ளவர்களையும், இளைஞர்களையும் கொரோனா தொற்று இரண்டாவது அலையில் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் இதய செயலிழப்பு ஏற்பட்டு, உயிரிழப்பையும் சந்திக்கிறார்கள். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல் அறிகுறிகள் வந்தவுடன் சுயமாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தாமல், அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா பரிசோதனை குறித்த அச்சத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதே தருணத்தில் அரசு அறிவித்திருக்கும் பரிந்துரைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசியை செலுத்திக்கொள்வது, சீரான இடைவெளியில் கைகளை சோப்பு போட்டு சுத்தப்படுத்திக் கொள்வது ... ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

வரும் வாரங்களில் கொரோனாத் தொற்றின் மூன்றாவது அலை வீசும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், அவசியமின்றி வீட்டிற்கு வெளியே செல்லாமல், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்புடன் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.