'எச்சரிக்கையாக இருந்தும் கொரோனாத் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறேன்' என்று நடிகை சுனைனா தெரிவித்திருக்கிறார்.

‘காதலில் விழுந்தேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுனைனா, கொரோனாத் தொற்றால்  பாதிக்கப்பட்டிருப்பதாக இணையப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்

இதுதொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சுனைனா தெரிவித்திருப்பதாவது...

‘ தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

என்னுடைய குடும்பத்தினர் தவிர வேறு யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால், அவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

அனைவரும் வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்புடன் இருங்கள். முழுமையான விழிப்புணர்வுடன் இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்’ என பதிவிட்டிருக்கிறார்.

கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன்போது ஏராளமான அரசியல் பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இயக்குனர்கள் தாமிரா, கேவி ஆனந்த், நடிகர் பாண்டு, நடிகர் ஜோக்கர் துளசி, தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கொரோனாத் தொற்று பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.  

இதனிடையே ‘கொரோனா தொற்று பாதிப்பிற்கு நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் முன்னணி துடுப்பாட்ட வீரர்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.