மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் முதல்வராக கடந்த 7ஆம் திகதியன்று பதவி ஏற்றுக்கொண்டார். 

அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். தற்காலிக அவைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், தற்காலிக சட்டப்பேரவையான சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. 

இதற்கு தற்காலிக சபாநாயகரான கு.பிச்சாண்டி சட்டப்பேரவையை தலைமையேற்று நடத்தினார். முதலில் அனைத்து கட்சியை சார்ந்த வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரான  எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதி மொழி ஏற்றனர்.

கொரோனா பரவல் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது தளத்தில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து பங்குபற்றினர். 

நாளை சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான திமுகவில் 125 உறுப்பினர்கள் இருப்பதால், அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். 

திமுக சார்பில் சபாநாயகராக அப்பாவு  என்பவரையும், துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி என்பவரையும் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இவர்கள் இருவரும் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாளை நடைபெறும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டவுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி முடிவு செய்யும்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் அதிமுக, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதன்முறையாக வெற்றி பெற்ற நான்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். 

இவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் மடத்திற்கு ஜீயர் நியமிப்பது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை வெளியிட்டிருக்கும் விண்ணப்பம் குறித்து பிரச்சனையை எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதால் கலைவாணர் அரங்கம் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.