"ஓர் ஆணுக்கு புகட்டப்படும் கல்வியானது தனிநபர் கல்வியாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணுக்கு கற்பிக்கப்படும் கல்வியானது ஒரு முழு சமூகத்தையும் நெறிப்படுத்தும். "எனும் மகாத்மாகாந்தியின் வாக்கு நிதர்சனமான உண்மை.

இன்று பல சவால்களை சமாளித்து சாதனைகளைப்படைத்துக்கொண்டிருக்கும் தனியார் தமிழ் பெண் பாடசாலைகளில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம் முதன்மையானது யாவரும் அறிந்ததே.

இப் பெண் மாணவிகளின் சாதனைகளுக்கு முதுகெலும்பாக விளங்குபவர்கள் எம் வித்தியாலய ஆசிரிய பெருந்தகைகளே என்று கூறின் மிகையாகாது.

அவ்வாறான திறமையான ஆசிரியர்களில் வணிகக்கல்வி ஆசிரியரும் மாணவத்தலைவியர் ஒன்றியத்தின் பொறுப்பாசிரியருமாகி இன்றுடன் பிரியாவிடை காணும் திருமதி சுரநுதா ஜெயரூபன் அவர்களுக்கு இச்சிறுகட்டுரை சமர்ப்பணம் ஆகும்.

 1979 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 10 ஆம் திகதி திரு, திருமதி சிவகுருநாதபிள்ளை - விமலநாயகி தம்பதியினரின் செல்ல மகளாக யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பிறந்தார்.

பெற்றோரின் அன்புமகளாகவும், 3 தமையன்மாரின் பாசமிகு தங்கையாகவும் விளங்கினார்.  தனது ஆரம்பப்பிரிவு கல்வியை யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியின் முதல் மூன்று வருடங்கள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலையிலும் கற்ற இவர் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கற்றல் நடவடிக்கையினை கொழும்பு சைவமங்கையர் வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 

பாடசாலைக் காலங்களில் விவாத மன்றத் தலைவியாகவும் மாணவத் தலைவியாகவும் திகழ்ந்தார். மேலும் நாடகங்கள், பேச்சுப்போட்டிகள், கவிதைகள், சிறுகதைகள், அறிவிப்புத்துறை என்பவற்றிலும் தடம்பதித்திருந்தார். தனது மாணவப் பருவத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு நன்மதிப்பு மிக்க மாணவியாகவும், நட்பு வட்டாரத்தில் சிறந்த தோழியாகவும், பாடசாலை மாணவர்களுடன் அன்பான சகோதரியாகவும் திகழ்ந்து பலரது மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர்.

வர்த்தகப் பிரிவில் தனது இளநிலைபட்டத்தை (B.Com) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். மேலும் கொட்டகல ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் தமிழ்ப் பாடம் தொடர்பாக சிறந்த பயிற்சியினையும் (தமிழ்விசேடம்) பெற்றுக் கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மனித உரிமை மற்றும் மனிதவள டிப்ளோமாவையும் நிறைவு செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

தான் கற்ற கொழும்பு சைவமங்கையர் வித்தியாலத்தில் 2000 ம் ஆண்டு தொண்டராசிரியராகப் பணியாற்றிய இவர்  2001 ம் ஆண்டு கொ/சைவமங்கையர் வித்தியாலத்தில் தமிழ்ப் பாட ஆசிரியராக இணைந்து கொண்டார்.   2010 ஆண்டு தொடக்கம் வணிகக் கல்வியை பிரதான பாடமாகக் கொண்டு கற்பிக்கத் தொடங்கினார். 

இவ்வாறு சிறந்த ஆசிரியராக பணியாற்றிய இவர் மாணவர்களை பாடசாலைக் கல்வியில் மட்டுமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்குவிக்க தவறவில்லை.

2002ம் ஆண்டு தொடக்கம் பாடசாலை விவாத மன்றம் மற்றும் வில்லுப்பாட்டு, பொது அறிவுக்குழு என்பவற்றுக்கு பொறுப்பாசிரியராக பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமன்றி அயல்பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்பவர்களுடன் நன்முறையில் பழகுவதுடன் எம் வித்தியாலய செயற்பாடுகளுக்கும் அவர்களை இணைத்து பாடசாலைகளுக்கிடையிலான நல்லுறவையும் பெருந்தன்மையையும் பேணி வந்தவர்களுள் ஒருவர்.

இவரது வழிகாட்டலில் பாடசாலை மாணவிகளை வலய,  கோட்ட மட்டம் மற்றும் அகில இலங்கை ரீதியான போட்டிகளில் சாதனை படைக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

அது மட்டுமல்லாது பாடசாலை மாணவத்தலைவியர் ஒன்றியத்தை வழிநடத்தும் பொறுப்பை 2017ம் ஆண்டு தொடக்கம் திருமதி சுரநுதா ஜெயரூபன்,அவர்கள் எடுத்து நடாத்தியமை சிறப்பானதே.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு மாணவத் தலைவரியர் ஒன்றியம் முதன்முதலாக முழு நேர ஒன்றிய விழா நடத்தியதும் 2019ம் ஆண்டு எமது பாடசாலையால் ஒழுங்கு செய்யப்பட்ட Aurora “ வானமே எல்லை ” பொதுக் கண்காட்சி 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டு Rotaract Club of Pearl Island இனால் ஒழுங்கு செய்யப்பட்ட Titans Game இல் முதலாம் இடத்தைப் பெறவும் அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் திருமதி சுரநுதா ஜெயரூபன் அவர்களின் உழைப்பு முக்கிய பங்காகும்.

இவ்வாறு பாடசாலை மாணவிகளை சிறந்த தலைவராக்கும் சேவையில் மட்டுமல்லாது பாடசாலை மாணவிகளின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கும் ஒழுக்காற்றுக் குழுவிலும் அங்கம் வகித்தார்.

பற்பல சேவைகளை எம் பாடசாலை சமூகத்திற்கு மட்டுமன்றிய தான் இருக்கும் சுற்றுச்சூழல் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமாக சேவை ஆற்றியும், பாடசாலை மாணவிகளின் மனங்களில் 'அம்மா' என்றழைக்கக்கூடிய அளவு நீங்காத இடத்தையும் பெற்றுக்கொண்ட இவர் தனது 20 வருட ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

எம் பாடசாலை வரலாற்றுப் பாதையில் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒருபடிகல்லாக திகழும் திருமதி சுரனுதா ஜெயரூபன் அவர்கள் நம்மிடமிருந்து பிரிவது பாடசாலை சமூகத்திற்கு பெரும் இழப்பாக இருந்தாலும், அவரும் அவரது குடும்பமும் நலமுடன் வாழ கடவுளை பிரார்த்திக் கொள்கின்றோம்.

கொ/சைவமங்கையர் வித்தியாலயம்,

மாணவ தலைவியர்ஒன்றியம் 2021 மற்றும் பாடசாலை சமூகம்.