(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சீனப்பெண்னொருவருக்கு முதலாவதாக கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதன் பின்னர் நேற்றுவரையான காலப்பகுதியில் நேற்றைய தினமே ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 2672 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 13 பேர் தவிர ஏனைய அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர். கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 800 ஐ கடந்துள்ளது.

 

ஐக்கிய அரபு இராச்சியம் பயணிகள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்துள்ள நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நாளுக்கு நாள் நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் உயர் மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதே வேளை மேல் மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுன்கு ஆயிரத்திற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

 இன்று 1581 தொற்றாளர்கள்

 நாட்டில் இன்று இரவு 10.30 வரை 1581 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 27 487 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் ஒரு இலட்சத்து 4462 பேர் குணமடைந்துள்ளதோடு , 22 223 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளிலும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 1365 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில் , 6285 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 1300 தொற்றாளர்கள்

 நேற்று மேல் மாகாணத்தில் மாத்திரம் 1312 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிகளவானோர் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர். அதற்கமைய கொழும்பில் 755 தொற்றாளர்களும் , கம்பஹாவில் 323 தொற்றாளர்களும், களுத்துறையில் 234 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

 இதே வேளை காலியில் 228 தொற்றாளர்களும், இரத்தினபுரியில் 192 தொற்றாளர்களும் , கண்டியில் 127 தொற்றாளர்களும் மற்றும் பொலன்னறுவையில் 118 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டனர். எஞ்சிய 669 தொற்றாளர்களும் குருணாகல், யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம், அநுராதபுரம், மாத்தறை, மாத்தளை, அம்பாறை, நுவரெலியா, வவுனியா, அம்பாந்தோட்டை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இனங்காணப்பட்டனர்.

கொவிட் மரணங்கள் 800 ஐ கடந்தது

மேலும் நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. பண்டாரகம, அம்பிட்டிய, கனேமுல்ல, றாகமை, குளியாப்பிட்டி, பிலிலை, கல்கிரியாகம, பசறை, வஸ்கடுவ, நேபொட, போம்புவல, நாவுத்துடுவ, கொழும்பு 7 மற்றும் மடோல்கெலே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 46 - 86 வயதுக்கு இடைப்பட்ட 10 பெண்களும் 5 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 ஐக்கிய அரபு இராச்சியம்

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலிருந்து செல்லும் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பிரவேசிக்க தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. கொவிட் அச்சுறுத்தலால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 இன்று முடக்கப்பட்ட பகுதிகள்

இன்று திங்கட்கிழமை 5 மாவட்டங்களில் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பல தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய  கம்பஹா மாவட்டத்தில் எட்டிகெஹெல்கல மேற்கு, கே.சி. சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு, கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அடபஹகாவத்தை கிராமம், கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பேஷகர்மா கிராமம், சீதவத்த பேஷகர்மா கிராம உத்தியோகத்தர் பிரிவில் மஹா பமுனுகம, குஞ்சங்கஹாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவில் 44 ஆவது தெரு, நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 மற்றும் 7 ஆவது தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

 இதே போன்று அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு , நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் நவமெதகம பிரதேசம், பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் ரன்ஹெல்கம பிரதேசம், சேருப்பிட்டிய பிரதேசம் என்பனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் அங்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் பலன்னொருவ, கொரலைமா, கம்புக்க, நர்தனகல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , மொனராகலை மாவட்டத்தில் போஹிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

இன்று திங்கட்கிழமை கம்பஹா, அம்hறை, குருணாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கம்பஹாவில் திவுலபிட்டி பொலிஸ் பிரிவில் அஸ்வென்னவத்த கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவில் ஹீரலுகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறையில் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவில் கதிராபுர, தெஹியத்தகண்டி - சந்தன , தொலகந்த ஆகிய பகுதிகள், குருணாகல் மாவட்டத்தில் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில் தித்தவெல்லகால , நீராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்  தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவில் அன்புவெளிப்புறம், திருகோணமலை பொலிஸ் பிரிவில் உவர்மலை , மட்கோவ், லிங்கநகர் என்பனவும், சீனக்குடா பொலிஸ் பிரிவில் சீனக்குடா - லங்காபாலம, தான்யகம 1 என்பனவும், கவாட்டிக்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமன்புர, கடற்றொழில் கிராமம், தான்யகம 2 ஆகிய பகுதிகள்  தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 களுத்துறையில் பாணந்துரை பொலிஸ் பிரிவு - நாரம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு  தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன திணைக்களத்தின் அறிவிப்பு

 மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்கள் ஊடக வழங்கப்படுகின்ற சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதோடு , சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தொலைபேசியூடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அகஹகோன் தெரிவித்துள்ளார்.