வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார தொணடர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தெரிவு சேவை மூப்பு அடிப்படையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று(10.05.2021) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் விரிவாக ஆராயப்பட்ட நிலையில், தன்னுடைய நியாயங்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மேற்குறிப்பிட்டவாறு நியமனங்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த சுகாதாரத் தொண்டரர்கள் நிரந்தர நியமனம் இன்றிப் பல வருடங்களாக கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக அமைச்சரவை கூட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊடாக நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.