(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவராகவிருந்த மலிக் சஹீர் கொரோனா தொற்றுப்பாதிப்பால் கடந்த வெள்ளியன்று தனது 67 ஆவது வயதில் காலமனார்.

திடீர் மாரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பின்னர் கொவிட் 19 கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அன்னாரின் இறுதிச் சடங்கு கொவிட் 19 வழிமுறைகளுக்கு அமைவாக கடந்த 8 ஆம் திகதியன்று காத்தான்குடியில் நடைபெற்றது.  

2001 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கை ஹொக்கி சம்மேளனத்தின் உப தலைவராக கடமையாற்றிய இவர், ஒருசில காலமாக கொழும்பு ஹொக்கி சங்கத்தின் தலைவராகவும்  செயற்பட்டிருந்தார்.

ஹொக்கி விளையாட்டை பெரிதும் ஆதரித்த மலிக் சஹீர், பல்வேறு சர்வதேச போட்டித் தொடர்களின்போது இலங்கை மகளிர் ஹொக்கி அணிக்கும் இலங்கை கனிஷ்ட ஆடவர் ஹொக்கி அணிக்கும் அணி முகாமையாளராக கடமையாற்றியிருந்தமை நினைவுகூரத்தக்கது.

கொழும்பு கேரி கல்லூரியின் பழைய மாணவரான இவர், கொழும்பு கோல்ட்ஸ் கழகம் , கொழும்பு மலே கழகம் ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.