பாகிஸ்தானில் அவதூறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பயங்கரமான அதிகரிப்பு ஏற்பட்டடுள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான நேரடியான மற்றும் எதிர்மறையான தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

 

இதனால் அந்நாடு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான தகுநிலைக்கான பாகிஸ்தானின் தகுதியை மீளாய்வு செய்யக்கோரி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் தொடர்பில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.

  

பாகிஸ்தான் ஏமாற்றத்தினை வெளிப்படுத்தி வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள  உத்தியோகபூர்வ அறிக்கையில், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், பாக்கிஸ்தான் மற்றும் பிற முஸ்லிம் நாடுகளில் உள்ள அவதூறு சட்டங்கள் மற்றும் மத உணர்வுகள் குறித்து 'புரிந்துணர்வு இல்லாததை' பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளதாக அரபு செய்திகள் தெரிவித்துள்ளது.

  

அத்துடன் பாகிஸ்தானில் துடிப்பான சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள் மற்றும் சுயாதீன நீதித்துறை ஆகியவற்றையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் கொண்ட நாடாகும். அதுமட்டுமன்றி அனைத்து குடிமக்களுக்கும் பாகுபாடின்றி இருப்பதோடு மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுமையாக உறுதியுடன் பாகிஸ்தான் அரசாங்கம் உள்ளது' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது, பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு தூண்டுதலை 'சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்' என்று பாகிஸ்தான் அரசாங்கத்தை கோருவதாக உள்ளது. அத்துடன் பாகிஸ்தானில் நிலவும் பிரான்ஸ் எதிர்ப்பு உணர்வு தொடர்பாகவும் 'ஆழ்ந்த கவலையை' வெளிப்படுத்துகிறது என்று 'டான் செய்தி சேவை' தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் பிரான்ஸ் தூதுவரை வெளியேற்றக் கோரியும் அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் அவரைக் கைது செய்யக் கோரியும் தெஹ்ரீக்-இ-லாபியாக் பாகிஸ்தான் (டி.எல்.பி) உறுப்பினர்கள் சட்டவிரோதமான முறையில் வன்முறை போராட்டங்களை நடத்தினர். அவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  

அதேநேரம், உள்நாட்டில் போராட்டத்தினை முன்னெடுத்த இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் பிரான்ஸ் தூதுவரை வெளியேற்ற நாட்டின் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

  

இந்தத் தீர்மானத்தை ஐரோப்பிய பாராளுமன்றின் அமர்வில் சுவீடனின் பாராளுமன்ற உறுப்பினர் (எம்இபி) சார்லி வீமர்ஸ், பாகிஸ்தானில் மத அவதூறு குற்றச்சாட்டுகளின் பேரில் மத சிறுபான்மையினர் கொல்லப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டினார்.

'பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக செயற்பாடாது தனது குடிமக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதை செய்யாது, ஹோலோகாஸ்ட் மறுப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியன இஸ்லாத்தின் நபி (ஸல்) அவர்களை விமர்சிப்பதற்கு சமமானது' என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

  

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றமானது, பாகிஸ்தானில் நடைபெற்ற தற்போதைய நிகழ்வுகளின் அடிப்படையில் அந்நாடு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான தகுதியை உடனடியாக மறுபரிசீலனை செய்வதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவை ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

மேலும் பாகிஸ்தானுக்கான சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெறுவதற்கான நடைமுறையைத் தொடங்க போதுமான காரணம் உள்ளதா என்பதையும் அதனை விரைவில் அறிக்கையிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

  

ஜனவரி 2014 இல், ஐரோப்பிய ஒன்றியம் அதன் முதன்மை வர்த்தக திட்டமான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் உள்வாங்கி அதற்கான அந்தஸ்தை வழங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையானது, சிறந்த மனித உரிமை பதிவுகளைக் கொண்ட வளரும் நாடுகளுக்கு வரிச்சலுகைப் பட்டியல்  மற்றும் விருப்பமான சுதந்திர வர்த்தகத்திற்கான ஏது நிலைமைகளை வழங்குவதாக உள்ளது.

  

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை தீர்மானமனது, 2014இல் ஷகுஃப்தா ஹஸுசர் மற்றும் ஷப்காத் இம்மானுவேல் தம்பதியினரக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் கரிசனையைக் கொண்டது. ஷகுஃப்தா ஹஸுசர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் குறுஞ்செய்திகளை பதிவு செய்த தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டிருந்தன.  இந்நிலையில் குறித்த தம்பதியினர் தண்டிக்கப்பட்டதற்கான சான்றுகளில் ஆழமான குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் தீர்மானம் குறிப்பிடுகின்றது.

  

அதேநேரம், குறித்த தம்பதியினர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்படுவதற்கு வெகுகாலத்திற்கு முன்னதாகவே இந்த தம்பதியினர் குற்றம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவலொன்றும் உள்ளது. அதேநேரம், குறித்த தம்பதியினர், தங்களது மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தபோதும் அவர்கள் தொடாச்சியாக ஆறு ஆண்டுகளாக சிறையில் வைக்கப்பட்டிருந்ததோடு அதன் பின்னர் 2020 ஏப்ரலில் மேன்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  எனினும் பல தடவைகள் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதோடு, இந்த ஆண்டின் பெப்ரவரி 15 அன்று மீண்டும் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவதூறு குற்றச்சாட்டுகளில் 'பயங்கரமான அதிகரிப்பு' ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தீர்மானம் குறிப்பிட்டுள்ளது, 1987 க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகள் 2020 இல் நிகழ்ந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் பல மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் மிகவும் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளை குறிவைத்துள்ளதாக காணப்படுகின்றன. பாகிஸ்தானின் நிந்தனைச் சட்டங்கள் தனிப்பட்ட அல்லது அரசியல் தேவைக்காகவும், மத நம்பிக்கை, கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாடு உரிமை ஆகியவற்றை மீறுவதற்கே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன' என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, தீர்மானத்தின்படி, '2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் முறைகேடான சட்டங்களை முறையாக அமுல்படுத்தியதோடு, மத சிறுபான்மையினரை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்கத் தவறியதால், இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், அவதூறு வழக்குகள், கட்டாய மாற்றங்கள், அஹ்மதிகள், இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், ஷியா முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கடத்தல், கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றுதல், கற்பழிப்பு மற்றும் கட்டாய திருமணம் ஆகியவையும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  

குறிப்பாக, கற்பழிப்பு மற்றும் கட்டாய திருமணம் என்பன மத சிறுபான்மை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 2020 ஆம் ஆண்டில் உடனடி அச்சுறுத்தலாக இருந்தது, குறிப்பாக இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கைகள் சீரழிக்கப்பட்டும் இருந்தன என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றின்  தீர்மானம் பாகிஸ்தான் அரசாங்கத்தை அதன் உள்நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டைத் தூண்டுவதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்' என்றும் 'பயனுள்ள' நடைமுறை மற்றும் நிறுவன பாதுகாப்புகள் ஆகியவற்றை உறுதி செய்வதாகவும் சட்ட மீறல்கள், மற்றும் துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை தடுப்பதற்காக, பொலிஸ் கண்காணிப்பாளரின் கீழான எந்தவொரு காவல்துறை அதிகாரியும் வழக்கைப் பதிவு செய்வதற்கு முன்னர் குற்றச்சாட்டுகளை விசாரிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது.

அதேநேரம், பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான நேரடியான மற்றும் எதிர்மறையான தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்தும், குறிப்பாக பெண்களுக்கு எதிராகவும், சமூகத்தில் மிகவும் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பில் கவலை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த விடயங்கள் உள, உடல் ரீதியாக காணப்படுகின்ற நிலைமையில் அவற்றினை பாதுகாப்பது அவசியம் என்றும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.