சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்கட்சித் தலைவரும் புட்டின் விமர்சகருமான அலெக்சி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டபோது சிகிச்சையளித்த சைபீரிய வைத்தியசாலையின் முன்னாள் தலைமை வைத்தயர் காணாமல் போயுள்ளார் என அந்நாட்டு அரசு ஊடகமான டாஸ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மொஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட, கோமா நிலைக்குச்  சென்ற நவால்னி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், நவால்னிக்கு வைத்தியர் அலெக்சாண்டர் முரகோவ்ஸ்கி  சிகிச்சையளித்தார்.

இதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பரில் பதவி உயர்வு பெற்று ஓம்ஸ்க் பிராந்தியத்தின் பிராந்திய சுகாதார அமைச்சரானார்.

ஓம்ஸ்கில் உள்ள உள்ளூர் பொலிஸார் டாஸ்ஸிடம், முராகோவ்ஸ்கி  வெள்ளியன்று ஒரு வாகனத்தில் காட்டில் ஒரு வேட்டை தளத்தை விட்டு வெளியேறிய பின்னர், காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

முராகோவ்ஸ்கியின் பெயரைக் குறிப்பிடாத ஓம்ஸ்கின் பிராந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓம்ஸ்க் ஒப்லாஸ்டில் போல்ஷுகோவ்ஸ்கி மாவட்டத்தில் காணாமல் போன ஒருவரை பொலிஸ்  அதிகாரிகள் தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளது.