14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்.) மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பங்கெடுத்த நான்கு அணி வீரர்கள்  மற்றும் உறுப்பினர்களிடையே கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் மே 4 ஆம் திகதி போட்டிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

அது மாத்திரமன்றி இந்தியாவிலும் அன்றாடம் 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.

இந் நிலையில் பி.பி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி ஸ்போர்ட்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், கொவிட்-19 நிலைமைகள் காரணமாக மீதமுள்ள ஆட்டங்களை இந்தியாவில் நடத்துவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

வார்விக்ஷயர், சர்ரே மற்றும் எம்.சி.சி ஆகியவை செப்டம்பர் மாதத்தில் மீதமுள்ள போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளதாக கூறின. ஆனால் பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் இந்த வாய்ப்பைப் பற்றி விவாதிக்கவில்லை என்று வெள்ளிக்கிழமை கூறினார்.

தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு முழு ஐ.பி.எல். போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.