(எம்.மனோசித்ரா)

இலங்கையில் உருமாறிய புதிய வகை வைரஸ்கள் பல இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்று பரவலும் , அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. அதற்கமைய நேற்று  சனிக்கிழமை மாத்திரம் 22 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

றாகமை, கடவத்தை, முல்லேரியா, தலவத்துகொட, மொரட்டுவ, லுனுகெட்டியமத்த, பதியபலல்ல, கொழும்பு-8, புலத்கொஹூபிட்டிய, ஹூன்னஸ்கிரிய, கட்டுகஸ்தோட்டை, ஹல்கிரன்ஓயா, ஹொரம்பெல்ல, கனேமுல்ல, குருதெனிய, கடவத்தை, பிபில, அகலவத்தை, வலஹந்தூவ, போத்தல, கலகெதர மற்றும் கன்னொருவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 16 ஆண்களும் , 6 பெண்களுமே இவ்வாறு கொவிட் தொற்றாள் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

இன்றும் 2000 இற்கும் அதிக தொற்றாளர்கள்

அத்தோடு இன்று இரவு 10 மணி வரை நாட்டில் 2672 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 125906 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 4463 பேர் குணமடைந்துள்ளதோடு , 19 717 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புத்தாண்டின் பின்னர் இன்று மாலை வரையான காலப்பகுதியில் மாத்திரம் 28 303 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் பல பகுதிகள் முடக்கம்

இன்று காலை இரத்தினபுரி , நுவரெலியா மாவட்டங்களில் 20 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன. இரத்தினபுரி - ரக்குவானை பொலிஸ் பிரிவில் தொலேகந்த, ரம்புக்க, கத்லான, தனபெல, இழும்பகந்த, பொதுப்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கலவான பொலிஸ் பிரிவில் பானாபொல, குடுமிரிய, குடவ, தெல்கொட கிழக்கு, தெல்கொட மேற்கு, திவ்கலகம, கஹலகமுவ, கொஸ்வத்தை, தபஸ்ஸரகந்த, வத்துராவ, வெம்பியகொட, வெத்தகல கிழக்கு மற்றும் மேற்கு, கலவான மேற்கு ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் லிந்துல பொலிஸ் பிரிவில் சென்கூம்ஸ் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் களுத்துறை - பாணந்துறை பொலிஸ் பிரிவில் நாரம்பிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க்பபட்டுள்ளது.

பிலியந்தலை வர்த்தக கட்டடத் தொகுதி மூடப்பட்டது

பிலியந்தலை வர்த்தக கட்டடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. எழுமாற்று பரிசோதனையில் கொரோனா தொற்றுக்குள்ளான 101 பேர் அடையாளம் காணப்பட்டமையினால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.