(எம்.மனோசித்ரா)

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் நாம் சிறந்த நிலையிலேயே உள்ளோம். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அரசாங்கத்தின் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் , மூன்றாம் அலை சவால் மிக்கதாக இருந்தாலும் அதனை நாம் வெற்றிகரமாக கட்டுப்படுத்துவோம் என கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்hங்களுக்கமைய கிடைக்கப் பெறும் நிதியை வேறு வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்த முடியாது என்பதைக் கூட எதிர்க்கட்சி தலைவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியிலும் கூட , சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டதன் பின்னர் , குறித்த வேலைத்திட்டங்களை கைவிட்டால் நாம் அவற்றுக்கு மேலதிகமாக பணத்தை செலுத்த வேண்டியேற்படும். நாட்டு மக்களின் வரியின் ஊடாக அந்த பணத்தை செலுத்த நேரிடும். எனவே தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதன் படி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றார். ஒப்பந்தம் மூலம் பெற்றுக் கொண்ட நிதியை வேறொரு தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பது எதிர்க்கட்சி தலைவருக்கு புரியவில்லை. எனவே அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உலங்கு வானூர்திகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது.

ரஷ்யாவின் கடனுதவியின் கீழ் அவற்றை கொள்வனவு செய்து ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் குறித்த உலங்கு வானூர்திகள் இணைக்கப்படும் என்று விமானப்படை தளபதி தெளிவாக தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் இன்னும் இருவருடங்கள் தாமதமானால் எமக்கு 4000 மில்லியன் மேலதிகமாக செலுத்த வேண்டியேற்படும். இது மக்களின் பணமாகும். நாம் மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.