"ஆரிரோ ஆராரிரோ"

By Digital Desk 2

09 May, 2021 | 09:24 AM
image

"தாயைப் போல பிள்ளை நூலை போல சேலை" என்பது பழமொழி. முதலில் உலகிலுள்ள அனைத்து அன்னையர்களுக்கும், அன்னை உள்ளம் கொண்ட அனைத்து தந்தையர்களுக்கும் அன்பான அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.  அன்னையைப் போற்றும் இது போன்ற ஒரு நாளில் முதியோர் இல்லங்கள் பற்றி சற்று சிந்தித்தால் சிறப்பாக இருக்கும்.வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் குழந்தை பருவமாகவே இருக்கும். குழந்தை பருவத்தில் தாயாக இருக்கும் ஒரு பெண் தன்னுடைய முதுமை பருவத்தில் குழந்தையாக மாறுகின்றாள்.

தன்னுடைய பிள்ளை குழந்தை பருவத்தில் செய்யும் உடற்கழிவுகளை சுத்தம் செய்து, அதன் குறும்பை இரசித்து, அவனுக்காக தூக்கம் இழந்து, ஒரு கேள்வியை ஆயிரம் முறை கேட்டாலும் சற்றும் சலித்துக்கொள்ளாது, இன்முகத்துடன் பதில் சொல்லி, அதன் மழலை பேச்சை இரசித்து கண்ணுக்குள் பொத்தி காத்து வளர்த்த அன்புப் பிள்ளை, தன்னுடைய இயலாத காலத்தில் தன்னை கைவிடும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனம் எப்படியெல்லாம் ஏங்கிப்போகும். இதையே தாய் தன்னுடைய முதுமை பருவத்தில் செய்யும் போது பிள்ளையின் நடத்தை எவ்வாறு உள்ளது என்று நாம் எம் கண்கூடாக பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றோம்.

இன்று அன்னையர் தினம் என்றதும், " I love my mom"என்று சமூக வலைத்தளங்களை நிரப்பும் எத்தனை பேர், "அம்மா சாப்பிட்டீங்களா?" என்று கேட்பவர்களாக இருக்கின்றோம். எத்தனை மகள்கள் அம்மாவின் வீட்டு வேலைகளில் சிரமத்தை குறைக்க  அவருக்கு உதவி செய்கின்றோம். எத்தனை பிள்ளைகள் அம்மாவின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்கின்றோம். நவீன கலாச்சாரத்தை பொருத்தவரையில் இன்றிருக்கும் தாய்மார் அநேகமாக தொழிநுட்பத்தில் நாட்டம் குறைந்தவர்களாகவே உள்ளனர். சமூக வலைதளங்களில் சிக்காத பெற்றோர் பரம்பரையின் இறுதி வாரிசுகள் நாம் தான் என்ற பெருமைக்குரியவர்கள் நாங்கள். ஆனால் அதனையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தாய் தந்தையை ஏமாற்றும் ஒரு கவலையான சூழலை உருவாக்கிக்கொண்டுள்ளோம்.

அன்னை மீதான உங்கள் அன்பை மற்றவர்களுக்கு சொல்லுமுன் அதனை செயலில் உங்கள் தாயிடம் தெரிவியுங்கள். இன்று பலரும் சொல்லும் ஒரு விடயம் தான், 'முதல் காதல் என்றும் மறக்காது' என்பது. உண்மையிலேயே அன்னை தான் எங்கள் முதல் காதல் என்ற நிதர்சனத்தினை உணர்ந்துவிட்டாலே போதும், முதியோர் இல்லங்களுக்கு நிரந்தரமாக பூட்டு போடப்படும்.

பிரதிபலன் எதிர்பாராத அன்னையிடம் அன்பை பரிமாறிக்கொள்வோம். அன்னையர்களை போற்றுவோம்.இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right