புத்தளம் ஆனமடுவ தோனிகல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07.05.2021) மாலை மின் தாக்குதலுக்குள்ளாகி இளம் யுவதி உயிரிழந்துள்ளார்.

ஆனமடுவ , தோனிகல பகுதியைச் சேர்ந்த குடா இளந்தாரிகே அனுசா உதயங்கனி எனும் இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முகம்மது ஹிஸாம் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை புத்தளத்தில் இடியுடன் கடும் மழை பெய்துகொண்டிருந்த போது குறித்த இளம் யுவதி தனது வீட்டிற்கு வெளியே தேங்காய் உரித்துக் கொண்டிருந்த போதே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக குறித்த யுவதியை ஆனமடுவ வைத்தியசலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்த குறித்த யுவதியின் சடலம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறு கிடைத்ததும் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படும் எனவும் சடலம் தற்பொழுது புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம், கற்பிட்டி பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முகம்மது ஹிஸாம் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.