இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

அரசியல், விளையாட்டு, திரையுலகம் என பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் விதிவிலக்கின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், வன விலங்குகளும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை.  அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் எட்டவாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

இதனையடுத்து அங்குள்ள 14 சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து பரேலியில் உள்ள பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அவற்றில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து அவை இரண்டும் மற்ற சிங்கங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன என சபாரி பூங்காவின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியூயோர்க் நகரில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் நான்கு வயது பெண் புலி நாடியா மற்றும் ஆறு புலிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே விலங்குகளுக்கு முதல் முறையாக  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் ஆகும். குறித்த விலங்குகளுக்கு தொற்று அறிகுறியற்று  விலங்கியல் பராமரிப்பாளரிடம் இருந்து பரவியுள்ளது. 

அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார அமைப்பான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பூனைகள், நாய்கள், மிங்க், சிங்கங்கள் மற்றும் பல பாலூட்டிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் விலங்குகளிடம் இருந்து  மக்களுக்கு பரவுவதற்கான ஆபத்து குறைவு என தெரிவித்துள்ளது.