இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற, ஸ்மித் மற்றும் பின்ச் ஆகியோரின் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தினால் முதல் வெற்றியை ருசித்தது அவுஸ்திரேலியா.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முத லில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவை 3-0 என்ற அடிப்படையில் வைட் வொஷ் வெற்றியை ருசித்த இலங்கை அணி புதுத் தெம்புடன் ஒருநாள் தொடரை ஆரம்பித்தது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக குசல் ஜனித் பெரேரா மற்றும் திலகரத்ன டில்ஷான் ஆகியோர் களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரின் நான்காவது பந்தில் குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் களமிறங்கினார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த டில்ஷான் 22 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் டில்ஸ் கூப் முறையில் ஆட முற்பட்டு பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு குசல் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த பெரிதும் போராடினர். இதில் நம்பிக்கை தந்து ஆடிவந்த இளம் வீரர் குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த அஞ்சலோ மெத்தியூஸ் (0), தனஞ்சய டி சில்வா (2), சிறிவர்தன (19), திஸர பெரேரா (21) என ஆட்டமிழக்க இறுதிவரை களத்தில் நின்ற தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நிறைவில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் அசத்திய பௌக்னர் 4 விக்கெட்டுக்களையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினர்.

இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 2ஆவது விக்கெட்டாக தனஞ்சய டி சில்வாவை 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்தார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்த போட்டிக்குப் முன் ஸ்டார்க் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். தற்போது இந்த போட்டியில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்ததால் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் 53 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

228 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக வோர்னர் மற்றும் பின்ச் ஆகியோர் களமிங்கினர்.

இதில் வோர்னர் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பின்ச் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். வாடேவும் 26 ஓட்டங்களைப் பெற்று வெளியேற, அணித் தலைவர் ஸ்மித் மற்றும் பெய்லி ஆகியோர் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க 58 ஓட்டங்க ளுடன் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட் டியது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியை அவுஸ்திரேலியா வெற்றிகொண்டு முன்னிலை பெற்றுள்ளது.


Australia vs Srilanka 1st ODI 2016 Full Highlights by sportsworlds