(செ.தேன்மொழி)
அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை மோதி காயமடையச் செய்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது காயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியும் , கான்ஸ்டபிள் ஒருவரும் நேற்று தங்களது கடமை நேர மோட்டார்  சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

இதன்போது பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிளும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில்,  அரச  உத்தியோகத்தரான  காரின்  சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து ஏற்படும் போது அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.