(நா.தனுஜா)
கொவிட் - 19 பரவல் தடுப்புப்பணிகளில் முன்னரங்கில் நின்று பணியாற்றும் அதிகாரிகளுக்கே இரண்டாம் கட்டத் தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்படாத நிலையில், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் முக்கிய நபர்களுக்கு இரகசியமான முறையில் இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. அதற்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன. எனவே இது குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவர் வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

சுகாதாரப்பிரிவினர் மற்றும் கொவிட் - 19 முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக முதலாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வழங்குவதற்குத் தற்போது போதியளவான தடுப்பூசிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் வெகுவாக அச்சமும் குழப்பமும் அடைந்திருக்கின்றார்கள். அதனால் தமக்கு இரண்டாம் கட்டத் தடுப்பூசியைப் பெற்றுத்தருமாறு பலர் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து முக்கிய நபர்களுக்கு இரகசியமான முறையில் இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. அவ்வாறு இருதினங்களுக்கு முன்னர் அதிசொகுசு வாகனங்களில் வருகை தந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு சென்றமைக்கு எம்மிடம் ஆதாரங்கள் உள்ளன.

எனவே இது குறித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். மக்களுக்கு வெளிப்படுத்தப்படாத இடமொன்றில் வி.ஐ.பிகள் இரகசியமான முறையில் வந்து தடுப்பூசிகளைப் பெற்றுச்செல்வதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னரங்கில் நின்று பணியாற்றும் அதிகாரிகளுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாத நிலையேற்பட்டுள்ளது. இவையனைத்தும் சில மாஃபியா குழுக்களின் துணையுடனேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அடுத்ததாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை தொடர்பில் அண்மைக்காலத்தில் வெகுவாகப் பேசப்படுகின்றது. ஏனெனில் அங்கு ஒரு மருத்துவரைத் தலைமையாகக் கொண்ட மருத்துவர்கள் குழுவொன்று கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான மருந்தொன்றைக் கண்டறிந்திருப்பதாகக் கூறிவருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் 'தம்மிக பாணி' தொடர்பில்கூறி மக்களை ஏமாற்றிவந்தார்கள்.

ஆனால் தற்போது மேல்நாட்டு மருத்துவ சிகிச்சை முறையைப் பின்பற்றுபவர்களால் அத்தகைய சிகிச்சையை வழங்கக்கூடிய மருத்துவமனைகளின் பெயரைப் பயன்படுத்தி இத்தகைய செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவருவது ஆச்சரியமளிக்கின்றது. எனினும் இவை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கள் எதனையும் பேசவில்லை. இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் வர்த்தக நோக்கத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.