இராஜதுரை ஹஷான்

கொவிட் - 19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சவால்களுக்கு மத்தியில் நாட்டை  முழுமையாக முடக்கும் நோக்கம் கிடையாது.சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆட்சியில் இருந்த அனைத்து காலக்கட்டங்களிலும் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளோம். யுத்த காலத்தில் கூட நாட்டின் அபிவிருத்தி பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டன.

யுத்தம் மற்றும் அரசியல் காரணிகளினால் அக்காலக்கட்டத்தில் அபிவிருத்தி பணிகள் முடக்கப்படவில்லை. மக்களுக்காக அபிவிருத்தி பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டன.எமது ஆட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பல அபிவிருத்தி நிர்மாண பணிகள் அரசியல் நோக்கங்களுக்காக விமர்சனத்துக்கப்பட்டன.தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பல்வேறு முறையில் விமர்சிக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டன. இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடை நிறுத்தப்பட்டன. அபிவிருத்தி பணிகள் அரசியல்  பழிவாங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. 2019 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மீண்டும் எமக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.அபிவிருத்தி நிர்மாணம், தேசிய பாதுகாப்பு ஆகியற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டை பொறுப்பேற்றோம். சவால்களை வெற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை  காணப்படுகிறது.

 பூகோளிய மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொறுப்புடன் செயற்படுகிறது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள முழு நாட்டையும் முடக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லை.

 கொவிட் -  19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ள சுகாதார பாதுகாப்பு அறிவுத்தல்கள் கடுமையாக செயற்படுத்தப்படும் என்றார்.

 நாட்டில் 7 ஆவது அதிவேக  நெடுஞ்சாலை அபிவிருத்தி நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று அலரி மாளிகையில் காணொளி முறையை ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கஹதுடுவ பகுதியில் இருந்து இங்கிரிய வரையிலான ருவன்புர நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாண பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.