எம்.மனோசித்ரா

உலகிலுள்ள 51 நாடுகள் 55 மில்லியனுக்கும் அதிக மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளன.

எனவே அந்த நாடுகளிலுள்ள சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து , துரிதமாக சினோபார்ம் தடுப்பூசியை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாளாந்தம் கூடும் கொவிட் செயலணிக் கூட்டம் நேற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. இதன் போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,

கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அவற்றை மக்களுக்கு வழங்குதல் என்பவை  வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும். குறுகிய காலத்திற்குள் அதிகபட்சமானோருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.

வைரஸ் மிக வேகமாக பரவும் மேல் மாகாணம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

ரஷ்யாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கும் பணிகள் வியாழனன்று ஆரம்பிக்கப்பட்டன. சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினர் வசமுள்ளன.

உலகிலுள்ள 51 நாடுகளில் 55 மில்லியனுக்கும் அதிக மக்களுக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான நாடுகளிலுள்ள சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து , துரிதமாக இந்த தடுப்பூசியை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதற்கட்டமாக அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்ற ஏனைய நாடுகளுடனும் தற்போது பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இதன் போது , தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள பகுதிகளை முடக்குதல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்தல் உள்ளிட்ட தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அதிகபட்ச நடவக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் போது அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

சகல வைத்தியசாலைகளிலும் சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் , அதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு முக்கியமாகும் என்றும் இதன் போது அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.