(எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில், பல ஆவணங்கள் காணாமல் போனமை குறித்த விவகாரம் தொடர்பில் விஷேட விசாரணைகளை, விளையாட்டு குற்றங்கள் தொடர்பிலான விசரணைகளை முன்னெடுக்கும் விஷேட விசாரணைப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். அதன்படி, நேற்றைய தினம்,  இலங்கை கிரிக்கட் நிறைவேற்றுக் குழுவின் முன்னாள் உறுப்பினர்  சுஜீவ கொடலியத்தவிடம்,  சுமார் 5 மணி நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.

 ஆவணங்கள் காணாமல் போனமை தொடர்பில்  ஊடகங்களில் வெளியிடப்பட்ட விபரங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகளை ஆரம்பித்ததாகவும், அதன்படியே சுஜீவ கொடலியத்தவிடம் விசாரிக்கப்பட்டதாகவும், விளையாட்டு குற்றங்கள் குறித்து விசாரிக்கும் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் பொன்சேக கூறினார்.

குறித்த ஆவணங்கள் காணாமல் போனதாக நம்பப்படும் ஞாயிறு தினம், சுஜீவ கொடலியத்த கிரிக்கட் நிறுவனத்துக்கு இரு தடவைகள் வந்து செல்வது சி.சி.ரி.வி. காணொளிகளில் தெளிவாக பதிவாகியுள்ளதன் பின்னணியில் அவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 குறிப்பாக குறித்த தினம்,  ஏஷ்லி டி சில்வாவின் அழைப்பிலேயே கிரிக்கட் நிறுவனத்துக்கு தான் சென்றதாக சுஜீவ பொலிஸாரிடம் கூறியுள்ளார். அவர் வெளியேறும் போது எதனையும் எடுத்து செல்வது சி.சி.ரி.வி. காணொளிகளில் இல்லாத போதும், அங்கு வைத்து அவர் எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் குறித்து பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதன்படி, யாருக்கு  எதற்காக அழைப்புக்களை எடுத்தார் என்பது தொடர்பில் விஷேட விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

 அதன் பிரகாரமே, நேற்று முற்பகல் 10.00 மணியளவில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுஜீவவிடம்  பிற்பகல் 3.00 மணி வரை விசாரணைகள் நடாத்தப்பட்டன. அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார்.

 இதனைவிட இந்த ஆவணங்கள்  காணாமல் போன விவகாரத்தில், கிரிக்கெட் நிறுவன பாதுகாப்பு அதிகாரிகள்,  முகாமையாளர் ஒருவர், சுஜீவ கொடலியத்தவின்  பிரத்தியேக செயளரான பெண் ஒருவர், சுஜீவவின் சாரதி  உள்ளிட்ட பலரிடம் பொலிஸார் இதுவரை விசாரணை நடாத்தியுள்ளனர்.