கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த 64 கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி குருணாகல் மாவட்டத்தில் 63 கிராம சேவகர் பிரிவுகளும் அம்பாறை மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவுமாக 64 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 82 கிராம சேவகர் பிரிவுகளில் 19 கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த 63 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குளியாப்பிட்டிய நகரம், அஸ்ஸெத்தும, மீகஹாகொட்டுவ, திக்ஹெர, தீகல்ல, கபலேவ, கிரிந்தவ, அனுக்கனே, மேல் கலுகமுவ, வெரலுகம, தப்போமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தண்டகமுவ, கிழக்கு மற்றும் மேற்கு, மடகும்புருமுல்ல, மேல் வீராம்புவ, கீழ் வீராம்புவ, கொன்கஹாகெதர, துன்மோதர, கெட்டவலகெதர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் உகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரிகம கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.