"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே." இப்படி பாடியது எந்தளவு பொருத்தமானது என்பதை இன்றைய சமூகம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

மழலை மொழி என்பது தெய்வீகமானது. ஆனால் இன்று ஒரு குழந்தை பேச ஆரம்பித்த பின்னர், பெரியவர்களிடம் வாயாடுவதையும், எதிர்த்துப்பேசுவதையும், திமிராக பேசுவதையும், மரியாதையில்லாமல் பேசுவதையும் பெற்றோர்கள் பெருமையாக மற்றவர்களிடம் சொல்வது எந்த விதத்திலும் பொருத்தமற்றது.

இதில் என்ன பெருமை? அங்கு திருத்தப்படாத குழந்தை வளரும் போது யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற முறை தெரியாமலே வளர்வதற்கு யார் காரணம்?

பாடசாலை வாழ்க்கையை ஆரம்பிக்கும் பிள்ளைகள் சிறு சிறு தவறுகள் செய்வது சகஜம் தான். அவற்றை அவ்வப்போது திருத்தி, அந்த தவறை சுட்டிக்காட்டும் பட்சத்தில் அப்பிள்ளை ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதை தடுக்க முடியும்.

ஆனால் இன்று அப்படியான ஒரு சூழல் இருக்கிறதா? உங்கள் பிள்ளை தவறு செய்துவிட்டதாக ஆசிரியரோ, சகமாணவனோ அல்லது ஏனைய பெற்றோரோ உங்களிடம் சொல்லும் போது உங்கள் பதில் அநேகமாக, "எனது பிள்ளை அப்படிப்பட்டவன் அல்ல" என்பதோ அல்லது முறைப்பாடு செய்தவர்கள் முன்னாலே உங்கள் பிள்ளையை அடித்தலாகவோ தான் இருக்கும்.

இதனால் யாருக்கு என்ன பலன். உண்மையை யோசித்துப்பார்த்தால், என்ன தவறு செய்தாலும் எனது பெற்றோர்கள் என்னோடு இருப்பார்கள் என்ற எண்ணத்தை உங்கள் பிள்ளைகளின் மனதில் விதைக்கும் நொடி அது. நீங்கள் இப்படி சொல்வதற்கு காரணம் என்ன? உங்கள் சமூக அந்தஸ்த்து பாதிக்கப்படக்கூடாது, பிறர் முன் நாம் தலைகுனியக்கூடாது என்ற எண்ணம் தான்.

அதனால் தான் நீங்கள் அவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள். ஆனால் அந்த நேரத்தில் திருத்தப்படாத தவறுகளால் உங்கள் எதிர்காலமும் உங்கள் பிள்ளையின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?

உங்கள் சமூக அந்தஸ்து, உங்கள் பிள்ளை வைத்திருக்கும் ஐ-ஃபோனிலோ அல்லது விலையுயர்ந்த உபகரணங்களை பயன்படுத்துவதிலோ இல்லை.

சமூகத்தில் அவனின் நடத்தை உங்களை பெருமைப்படுத்துமேயானால் அதுவே உங்கள் அந்தஸ்த்து. இதை தெரிந்தும் தெரியாதவர் போல், என் பிள்ளையை கஷ்டம் தெரியாமல் வளர்க்கின்றேன் என்ற பெயரில் அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது, பெற்றோராக உங்கள் தோல்வியை தான் காட்டுகிறது.

பிள்ளைகள் எம் கையில் இருக்கும் களிமண் போன்றவர்கள். அவர்களை அவர்கள் இஷ்டப்படி கரைந்துபோக விட்டுவிட்டு அவர்களை குறை சொல்லி என்ன பயன்.

அவர்களை சிறந்த சிற்பங்களாக மாற்றுவது பெற்றோரின் கையில் தான் உள்ளது. பிள்ளைகளுக்கு தண்டனை வழங்க இன்று யாருக்கும் அதிகாரம் இல்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில், பெற்றோர்களும் அவர்களை கைவிட்டுவிட்டால் இந்த உலகத்தில் அவர்களுக்கு யார் தான் துணை?

பெற்றோர்களே, உங்கள் சுயகௌரவத்திற்காக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காதீர்கள். ஒருவர் உங்கள் பிள்ளையின் தவறை சுட்டிக்காட்டுகிறார் என்றால், அதில் அவருக்கு எந்தவித இலாபமும் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

அதில் உண்மை உள்ளதா இல்லையா என தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுங்கள். சரியான நேரத்தில் திருத்தப்படாத தவறுகள் சிறந்த ஒரு பிரஜையை உருவாக்க தடையாக அமையும்.

உங்கள் பாடசாலை காலத்தை சற்று நினைத்துப்பாருங்கள், உங்கள் தவறை உங்கள் பெற்றோரிடம் சொன்ன போது, உங்களை திருத்தி, நல்லது எது கெட்டது எது என சொல்லித்தந்து வளர்ததனால் தானே சமூகத்தில் இன்று நீங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கின்றீர்கள். நீங்கள் இன்று சொல்வது போல் "என் பிள்ளை அப்படிப்பட்டவன் அல்ல' என்று அவர்களும் அன்று சொல்லியிருந்தால் இன்று உங்கள் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும். உங்களை சிறந்த பிரஜையாக்கிய உங்கள் பெற்றோருக்கு நன்றிக்கடனோடு இருப்பதோடு உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்புற பொறுப்புணர்வோடு செயற்படுங்கள்.

ஐந்தில் வளைக்காமல் ஐம்பதில் வருந்தாதீர்கள். கண்மூடித்தனமான நம்பிக்கை அழிவிற்கே இட்டுச்செல்லும் என்பதை உணர்ந்து பிள்ளைகளின் தவறை திருத்தி அவர்களை சிறந்த சிற்பங்களாக்குவோம்.