வவுனியாவில் இன்று அதிகாலை ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதிக்குள் புகுந்த யானைகள் பயன்தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளன. 

இச்சம்பவம் இன்று (07) அதிகாலை 2 மணியளவில் ஓமந்தை, பிரதான கண்டி வீதியைக் கடந்து பன்றிக்கெய்தகுளம் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள் பயன்தரும் மரங்களான  வாழை, பப்பாசி, மரவெள்ளி போன்ற மரங்களுக்கு சேதம் விளைவித்த பின்னர் அப்பகுதியிலுள்ள காட்டுப்பகுதியை நோக்கி சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் கடந்த மூன்று வருடங்களாக காட்டு யானைகளின் தாக்குதலால் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

 

இப்பிரச்சினை காரணமாக யானை வேலியினை அமைத்துத் தருமாறும், இவ்வாறான தாக்கங்களுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் கோரி கிராம சேவகர் ஊடாக உயர் அதிகாரிகளுக்கு கடந்த வருடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது அதிகாரிகள் அசண்டையினமாக இருப்பதாலே இன்றும் இத் தாக்கத்தினை எதிர் கொண்டுள்ளதாகவும், கடந்த வருடமும் வயலுக்குள் புகுந்த யானைகள் 2 ஏக்கருக்கு மேல் வயல்களை நாசம் செய்துள்ளதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.