ஏ.என்.ஐ.க்காக, கஸகஸ்தான் நூர் சுல்தான்

ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர் இன முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது குறித்த சீன பிரசார ஆவணப்படத்தை 'யதார்த்தத்தின் பயங்கரமான விலகல்' என்று உய்குர்கள் தொடர்பில் செயற்படும் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளதோடு அதனை நிராகரித்துள்ளனர்.

  

ஜின்ஜியாங்கினை உலகளாவிய பார்வையாளர்களிடத்தில் கொண்டு சென்று சேர்க்கும் பெய்ஜிங்கின் ஒரு முயற்சியாக, கடந்த ஏப்ரல் நடுப்பகுதியில் சீன அரசுக்கு சொந்தமான 'சீன குளோபல்  தொலைக்காட்சி வலையமைப்பு' ஆவணப்படமொன்றை வெளியிட்டது.

இந்த ஆவணப்படமானது,  ஆங்கிலம் மற்றும் ரஷ்யா உட்பட பல மொழிகளில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டிருந்தது. ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினரின், நிலைமையை குறிப்பாக கசாக் மற்றும் கிர்கிஸ் இனத்தவரின் வாழ்க்கையை சித்தரித்து 'பியோண்ட் தி மவுண்டன்ஸ்: லைஃப் இன் ஜின்ஜியாங்' (‘Beyond The Mountains: Life In Xinjiang’) என்ற ஆவணப்படம் குறித்து ரேடியோஃப்ரீ யூரோப் (RadioFreeEurope) மற்றும் ரேடியோ லிபர்ட்டி (RadioLiberty)ஆகியன அறிக்கையிட்டிருந்தன.

இந்த ஆவணப்படம் சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங்கினை  தமது சொந்த பிராந்தியம் என்றும் அதனை அவர்கள் அனுபவிப்பதாகவும் அங்குள்ள முஸ்லிம்களுக்கு வளமான வாழ்க்கை, தெரிவுச் சுதந்திரம் மற்றும் ஏராளமான வாய்ப்புகள் ஆகியவற்றையும் கொண்டிருப்பதாகவும் காட்டி நிற்கின்றது.

ரேடியோஃப்ரீ யூரோப் மற்றும் ரேடியோ லிபர்ட்டி ஆகியனவற்கு ஆவணப்படம் தொடர்பில் எழுதிய ஃபாரங்கிஸ் நஜிபுல்லா,  தனது அறிக்கையில் ஜின்ஜியாங்கின் முஸ்லிம்கள் மீது சீனாவின் மிருகத்தனமான ஒடுக்குமுறையைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, குறிப்பாக, 2017இல் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாரிய தடுப்பு முகாம்களில் மோசமான வலையமைப்பிற்குள் தள்ளப்பட்டு சிறைச்சாலைகளில் இருப்பதைப் போன்றுள்ளமையைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரேடியோஃப்ரீ யூரோப் மற்றும் ரேடியோ லிபர்ட்டி தொடர்பு கொண்ட  ஜின்ஜியாங் ஆர்வலர்கள் இந்த ஆவணப்படத்தை 'அப்பட்டமான சீன பிரசாரம்' என்று குறிப்பிட்டு கண்டனம் செய்துள்ளனர். அத்துடன்  உண்மையில் இதுவொரு பயங்கரமான உண்மைச் சிதைவு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

  

அதிகாரிகள் தங்கள் கலாச்சாரம், மதம், குடும்ப வாழ்க்கை மற்றும் மரபுகளை குறிவைப்பதால் அச்சம் மற்றும் அடக்குமுறையின் சூழலில் அங்குள்ள முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்ற ஜின்ஜியாங்கின் பூர்வீகர்த்தினரின் கருத்துக்களை இந்த ஆவணப்படம் எதிர்ப்பதற்கு முனைந்திருக்கின்றது.

மேலும், விளையாட்டு, இசை, வணிகம் மற்றும் பிற துறைகளில் இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர அரசாங்கம் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்ற தோற்றப்பாட்டை இந்த ஆவணப்படம் காட்டுகிறது.

ஆவணப்படத்தைப் பொறுத்தவரை, இளம் முஸ்லிம் தொழிலதிபர் மார்டன் அப்லிமிட் 'காஷ்கர் கோர்னர் கோபி மற்றும் டீ' என்ற ஆரம்ப வணிகத்தை தொடங்கி பின்னர் நகரத்தின் மையத்தில் ஒரு பிரபலமான கோப்பி, மற்றும் தேநீர் வியாபார நிலையத்தினை திறந்து தனது கனவை நனவாக்கியுள்ளதாக காண்பிக்கப்படுகின்றது.

  

மற்றொரு இளம் முஸ்லிம் பெண் தனது தொலைதூர கிராமத்திலிருந்து நகரத்திற்கு 'நல்ல ஊதியம்' அளிக்கும் தொழிற்சாலையில் பணியில் இணைந்து கொள்கின்றார். அவரின் நகரம் நோக்கிய நகர்வு அவரது குடும்பத்திற்கு ஒரு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்த உதவியது.

அத்துடன், ஒரு உய்குர் தொழிலதிபர் தனது சமூகத்தில் உள்ள இளம் பெண்களுக்கு மேற்கத்திய பாணியிலான திருமண ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுவது போன்றும் ஆவணப்படத்தில்  சித்தரிக்கப்பட்டுள்ளது.

அப்லிமிட்டின் வெற்றிக் கதையை அல்லது ஆவணப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் கதைகளை சரியானதா என்று பார்ப்பது கடினமாக உள்ளது.  அவர்கள் சீனா வழங்கிய வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவே ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது என்று எழுத்தாளர் நஜிபுல்லா கூறினார்.

உண்மையில், சீன அரசாங்கம் ஜின்ஜியாங் முஸ்லிம்களின் கலாசார மையங்களை மூடியுள்ளது, ஆயிரக்கணக்கான மசூதிகள் மற்றும் முஸ்லிம்களின் வரலாற்றுக் கட்டமைப்புகளை சேதப்படுத்தியது அல்லது இடித்தழித்துள்ளது. இதனைவிடவும் சமூகத் தலைவர்கள் பலரை சிறையில் அடைத்துள்ளது என்று நஜிபுல்லா தான் எழுதியுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

  

பல பகுதிகளில் முஸ்லிம்கள் 18 வயதை எட்டும் வரை மசூதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய பிரார்த்தனை, விடுமுறை கொண்டாட்டம் அல்லது பாரம்பரியமாக பெரிய குடும்பங்களை கொண்டிருந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல முஸ்லிம் குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு சிறப்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளனர். இளைய தலைமுறையினரை மூளைச் சலவை செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகவே இது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ரேடியோஃப்ரீ யூரோப் மற்றும் ரேடியோ லிபர்ட்டி அறிக்கை இட்டுள்ளது.

பெய்ஜிங் தகவல்களின் படி, நாட்டின் பெரும்பான்மை இனமான 'ஹான்' சீன மக்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஜின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம் குடும்பங்களை கண்காணிப்பதற்காக அவர்களுடன் வசிக்கின்றனர் என்று நஜிபுல்லா தெரிவித்துள்ளார்.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஏப்ரல் 28, 2020 அன்று வெளியிட்டுள்ள அதன் சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டு அறிக்கையில், 'நீண்ட தாடி வைத்துக்கொண்டு, மதுவை மறுத்ததற்காக தனிநபர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், அத்துடன் நீண்ட தாடியை அதிகாரிகள் தீவிரவாத மதத்தின் அறிகுறியாக கருதுகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜின்ஜியாங்கில் பரவலான உரிமை மீறல்கள் பற்றி வெளியாகும் அனைத்து அறிக்கைகளையும் சீனா மறுத்துள்ளதோடு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களை  தீவிரவாதத்தைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் என்று கூறி வருகின்றது.

  

ஆனால் அந்த தடுப்பு முகாம்களில் இருந்து தப்பிப்பிழைத்த பலரும், தடுப்பு முகாம்களில் உள்ள கைதிகளில் பலர் சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் கட்டாய உழைப்புக்கு ஆளாகிறார்கள், முக்கியமாக புடவை தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். சில பெண்கள் கருக்கலைப்பு செய்ய நிர்பந்திக்கப்படுகின்றார்கள். வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள் எனக் கூறப்படுகின்றது.

  

ஜின்ஜியாங்கில் நடந்த உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பல சீன அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததை அடுத்தே தற்போது உலகத்திற்கு தகவல்களை வழங்கும் வகையில் இந்த ஆவணப்படம் வருகிறது.

ஏப்ரல் 22ஆம் திகதி, பிரித்தானிய பாராளுமன்றம் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர்கள் மற்றும் பிற முஸ்லிம்களுக்கு எதிராக மனிதகுலத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான குற்றங்கள் செய்யப்படுகின்றன என்ற தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.