''குழந்தைகள் பசி, மலம் , சிறுநீர் பிரிதல் ஆகியவை ஏற்பட்டால் தான் தூக்கத்திலிருந்து அழுதுகொண்டு எழுகிறது. இவர்களுக்கு உணவோ அல்லது அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தை நீக்கிவிட்டு சுத்தப்படுத்திவிட்டாலோ மீண்டும் உறங்குவார்கள். அத்துடன் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை அந்த குழந்தைக்கு பகல் இரவு என்ற வேறுபாடு தெரியாது. இந்த நேரத்தில் இயற்கையின் உந்துதலுக்கு ஏற்பவே உறங்குகிறார்கள். ஆனால் நான்கு மாத முடிவில் அக்குழந்தை, பகலில் அதிகமானவர்கள் நடமாடுகிறார்கள். ஒலி அதிகமாக இருக்கிறது. ஒளியும் இருக்கிறது. ஆனால் இரவு நேரத்தில் அதிகமானவர்கள் நடமாடவில்லை. சத்தமும் இல்லை. யாரும் சுறுசுறுப்பாக இயங்கவில்லை, ஒளியும் குறைவாகவே இருக்கிறது. என்பதை உட்கிரகித்துக் கொள்கிறது. இதன் பின் தான் பகல் இரவு என்ற வேறுபாட்டை உணர்ந்துகொள்கிறது"என்று எம்முடன் இயல்பாக பேசத் தொடங்குகிறார் சென்னையில் பிரபலமான குழந்தைகள் நல மருத்துவரும், குழந்தைகள் உளவியல் நிபுணருமான டொக்டர் யமுனா. அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்து உரையாடினோம்.
* குழந்தைகளின் உறக்கத்தை வைத்து அவர்களின் நடத்தையையும் குணத்தையும் கண்டறிந்து அதனை அவர்களின் வளர்ச்சிக்குரிய நேர்மறையாக மாற்ற முடியுமா..! என்பது குறித்து தாங்கள் மேற்கொண்ட ஆய்வினைப் பற்றி சொல்லுங்களேன்?
பொதுவாக ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு கால கட்டம் தூக்கத்திற்காக செலவிடுகிறோம். இப்படியிருக்கும் தருணத்தில் தூக்கம் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? இதன் உபயோகம் என்ன? தூக்கத்திற்கு பின் நாம் எவ்வளவு தூரம் புத்துணர்ச்சியடைகிறோம்? இதன் காரணமாக எம்முடைய மூளை எவ்வளவு தூரம் சுறுசுறுப் படைந்து விரி வடைகிறது? என்பதை பற்றியெல்லாம் யோசிக்கும் போது தான் தூக்கத்தின் முக்கியத்துவம் புரியும்.
எம்மில் பலருக்கும் பலவித எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போது திடிரென்று ஒரு நொடியில் தூக்கம் எம்மை ஆக்கிரமித்துவிடும். இது எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது. தூக்கம் எம்மை தழுவ ஆரம்பித்தவுடன் எண் ணங்களின் பிடியிலிருந்து மெல்ல மெல்ல நழுவி உறக்க நிலைக்குச் செல்கிறோம். இதே தருணத்தில் குழந்தைகளுக்கு என்று வரும் போது அவர்களுக்கு தூக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் அண்மைய ஆய்வு களின் படி ஒவ்வொரு குழந்தையின் உடல் வளர்ச்சியும் உறக்கத்தின் போது தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சிக்கும் மூல காரணம் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பிகளின் செயற்பாடுகள். இவை ஆழ்நிலை உறக்கத்தின் போது தான் செயற்படத் தொடங்குகிறது.
ஒவ்வொருவரும் எட்டு மணித் தியாலம் வரை உறங்கவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள். இந்த எட்டு மணித்தியால உறக்கத்தின் போது எத்தனை 90 நிமிட தூக்க சுழற்சி வரும் என்பதை கணக்கிட்டு, அதிலிருந்து அதனை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரின் உடல் வளர்ச்சியும் ஆரோக்கியமும் கணக்கிடப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொருவரும் தினந்தோறும் ஐந்து தூக்க சுழற்சி வரை உறங்கவேண்டும் என்ற கணக்கீடு கூறுகிறது. அதே போல் பெரும்பாலானவர்களின் விழிப்பு நிலை என்பது கனவு வந்தபின் தான் நிகழும் என்பதை அனுபவத்தில் காணலாம். ஒரு சிலருக்கு கனவு வந்தபின் உறக்கம் கலையும். அந்த கனவை திரும்ப மீட்டெடுக்க இயலாது. இப்படி மீட்டெடுக்க இயலா நிலையிலுள்ள கனவை கண்டு எழுந்திருப்பது தான் ஆரோக்கியமான உறக்கம் என்று அழைக்கிறோம். அதே சமயத்தில் இந்த தூக்க சுழற்சி என்பது வளர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. குழந்தைகளுக்கு பொருந்தாது. ஏனெனில் குழந்தைகளின் பசியைப் பொறுத்தே அவர்களின் தூக்க சுழற்சி அமையும். அவர்களின் தூக்க சுழற்சி அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரையே நீடிக்கும். அதன் பின் அவர்கள் தாங்கள் ஆழ் நிலை உறக்கத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்றால் ஏதேனும் சிறிய அளவில் ஒலியை எழுப்புவதோ அல்லது சிரிப்பதோ அல்லது கைகால்களை அசைப்பதோ நடைபெறும். இதனை வைத்து அவர்கள் ஆழ்நிலை உறக் கத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்பதை உணரலாம்.
உலகத்திலேயே இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட ஆசிய நாட்டு குழந்தைகள் தான் குறைந்த அளவில் உறங்குகிறார்கள். நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு குழந்தைகள் தான் அதிகளவில் உறங்குகிறார்கள் என்று ஓர் ஆய்வில் கண்ட றியப்பட்டிருக்கிறது. இதற்கு அவர்கள் குழந்தைகளை இளம்பிராயத்திலேயே தனி யாக படுக்கையறையை ஒதுக்கி அதில் தூங்கவேண்டும் என்று பயிற்சி அளித்து பழக்கப்படுத்துவது தான் காரணம் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிலை தெற்காசியாவில் இல்லை என்பது தான் நடைமுறை யதார்த்தம். ஆரோக்கியமாக தூங்கியெழும் குழந்தையின் நடவடிக்கை நன்றாக இருக்கும். கல்வி கேள்வியில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நோயெதிர்ப்பு கூடுதலாக இருக்கும். பழகும் பண்பும் இனிமையாக இருக்கும். அந்த தோற்றப்பொலிவே நன்றாக இருக்கும்.
* குழந்தைகளை பயமுறுத்துவது அவர்களுக்குள் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பயமுறுத்தும் போது அவர்களுக்கு இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வராது. இதனை தொடர்ந்து செய்யும் போது, அது நடை பெறவில்லை என்றால் பயமுறுத்தலுக்கான மதிப்பீடு குறைந்து விடும். அதாவது ஒரு குழந்தையை சாப் பிடவில்லை என்றால் அடித்து விடுவேன் என்று தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு இருப்பது. ஆனால் ஒரு கட்டத்தில் நீங்கள் அடிக்காமல் இருந்தால். அடிப்பேன் என்று பயமுறுத்துவது வீணாகிவிடும். அதே போல் பயமுறுத்துவதைக் காட்டிலும் அன்பு நெறி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது தான் குழந்தைகள் அறிவார்த்தமாக வளர்வார்கள்.
* ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற கருத்துரு தான் இந்த சமூகத்தை பாதிக்கிறது என்கிறார்களே உண்மையா?
பெரிய அளவில் சிந்திக்கவேண்டும் என்றால் இது மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவும். ஆனால் நாளடைவில் உற்றார் உறவினர் என்பவர்கள் குறைந்துவிடுகிறார்கள். இதனால் குழந்தைகளோ அல்லது வளரிளம் பருவத்தினரோ தங்களின் பேச்சுத்துணைக்கும், தங்களின் எண்ணப் பகிர்தலுக்கும் சம வயதுடையவர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். ஆனால் பெற்றோர்கள் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தோழர்களையோ தோழிகளையோ உருவாக்கி கொடுத்தால் எந்த பிரச்சினையும் எழுவதில்லை. இதனைவிடுத்து தானும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும் சமூகத்தில் இருக்கும் யாருடனும் பழகவிடாமல் தனியாக வளர்த்தெடுக்கும் போது பிரச்சினை ஏற்படும்.
* சிங்கிள் பேரண்ட் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து..?
பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கூட்டுக்குடும்பமாகவோ அல்லது கணவன் மனைவி சேர்ந்து இருந்தாலோ குழந்தையை கவனிப்பது ஒருவர் தான். கதை சொல்வதாக இருந்தாலும் சரி, வழி நடத்துவதாக இருந்தாலும் சரி அன்பு சார்ந்த நெறிமுறையை பின்பற்றினால் போதும் என்பதே எம்முடைய பரிந்துரை
* தாய் தந்தை என இருவரும் இரண்டு வித தாய்மொழிகளாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு மொழியறிவு வளர்ச்சி அடைவதில் குழப்பம் இருப்பதாக கூறுகிறார்களே உண்மையா?
குழப்பம் இருக்காது. ஆனால் தாமதம் ஏற்படும். குழந்தை இரண்டு மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு பேசுவதற்கும் எதிர்வினையாற்றுவதற்கும் சற்று தாமதப்படலாமே தவிர குழப்பம் ஏற்படாது. அப்பா தமிழாகவும் அம்மா வேறு மொழியாகவும் இருக்கும் பட்சத்தில் இரண்டு பேரும் இரண்டு மொழியில் கொஞ்சினாலும், அந்த குழந்தை இரண்டையும் புரிந்து கொண்டு எதில் பதிலளிக்கவேண்டும் என்பதை கண்காணித்து அதன் பிறகே பேசத் தொடங்கும். அம்மாவிடம் அம்மாவின் மொழியையும், அப்பாவிடம் பேசும் போது அப்பாவின் மொழியையும் பேசும். சில குழந்தைகள் குறிப்பிட்ட காலம் வரை சைகையில் பேசக்கூடும். ஆனால் காலம் செல்ல செல்ல குழந்தையானது இரண்டு மொழிகளையும் கற்றுக்கொள்ளும் திறன் பெற்றுவிடும்.
* நியோநாட்டல் இன்டென்சிவ் கேர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எந்த வகையில் உதவுகிறது?
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை களுக்கும், பிறக்கும் போதே ஏராளமான மருத்துவ சவால்களுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் இது பெருமளவில் உதவி செய்கிறது. இதன் போது குழந்தைகளின் வெப்ப நிலை, ஓக்ஸிஜன் அளவு, மூச்சு விடுதல், இதயத் துடிப்பு கண்காணித்தல் மற்றும் அவர்களுடைய உடலிலுள்ள நீரின் அளவு எந்த விகிதத்தில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை பராமரிப்பது, இது போன்ற செயற்பாடுகளை நியோநாட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட் செய்கிறது. இதன் பிறகு அந்த குழந்தை தாய்பால் அருந்துதற்கு தயாரானவுடன் தாய்ப் பாலை புகட்டுகிறார்கள்.
அதே போல் சில குழந்தைகளுக்கு மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் அந்த குழந்தைக்கு வென்டிலேட்டர் கேர் கொடுப்பார்கள். இவர்கள் முதல் மூன்று நாள்கள் தப்பி பிழைத்து வந்தால் அவர்களின் ஆரோக்கியம் குறித்து பயப்படத்தேவையில்லை நன்றாக வேயிருக்கும்.
மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி dryamunapead@yahoo.com
சந்திப்பு: புகழ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM