விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட்டின் பாகங்கள் இந்த வார இறுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ராக்கெட்டின் பாகங்கள் எங்கு, எப்போது விழும் என்றத் தகவல்கள் விஞ்ஞானிகளால் தெளிவாகக் கூறப்படவில்லை.

அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில் லாங் மார்ச் 5-பி (Long March 5B) என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது.

தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

"இது யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் கூறினார். "

அதேபோன்று சீன அரசு ஊடகங்கள், மக்கள் வசிக்கும் நிலத்தில் ராக்கெட் விபத்துக்குள்ளாகக்கூடும் என்ற அச்சத்தை குறைத்து, சர்வதேச கடலில் எங்காவது விழும் என்று கூறியுள்ளன.