மாலைதீவின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீத் வியாழக்கிழமை தனது வீட்டிற்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் ஆண்னில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்த நஷீத் தற்சமயம் ADK வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளை குறித்த பகுதிக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்குமாறு மாலைதீவு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

53 வயதான நஷீத், 30 ஆண்டுகால எதேச்சதிகார ஆட்சியின் பின்னர், மாலைதீவின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவராவார். 

2008 முதல் 2012 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார்.

இச் சம்பவத்தில் மேலும் ஒரு சுற்றுலா பயணி காயமடைந்துள்ளதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வெடிக்கும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தாக ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.