ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம்  முதலாம் திகதி இலங்கை வரவுள்ளார். 

செப்டெம்பர் மாதம்   3 ஆம் திகதி வரை  இலங்கையில் தங்கியிருக்கும்  ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி, பிரதமர்,  வெளிவிவகார அமைச்சர்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும்   சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக  அரசாங்கம் மற்றும் எதிர்த்தரப்புக்களுடனான பேச்சுவார்த்தைகளின்போது  நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள்     ஜெனிவா பிரேரணை அமுலாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து  கலந்துரையாடப்படும். 

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  பிரதமர் ரணில் விக்ரமசிங்க   வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனான  கலந்துயைாடல்களின்போது  ஜெனிவா பிரேரணையின் அமுலாக்கம்  விசாரணை பொறிமுறையின் முன்னேற்றம் என்பன குறித்து ஆராயப்படும். 

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையிலான   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது   பொறுப்புக்கூறல்  பொறிமுறை  தொடர்பில்  ஆராயப்படும். 

இதன்போது தமிழ் பேசும் மக்கள்  எதிர்கொள்ளும் பிரச்சினைகள்   விசாரணை பொறிமுறையில்  சர்வதேசத்தின் பங்களிப்பு  அமையவேண்டியதன் அவசியம் என்பன குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பான் கீ மூனுக்கு  விளக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

எதிர்வரும்  செப்டெம்பர் மாதம்  நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  71 ஆவது கூட்டத்  தொடரிலும் ஜனாதிபதியும்   ஐ.நா. செயலர் பான் கீ மூனும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.  

இந்தக் கூட்டத்  தொடரே  பான் கீ மூன்  ஐக்கிய நாடுகள் செயலாளராக கலந்துகொள்ளும் இறுதி  பொதுச் சபை கூட்டத் தொடராக அமையும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன்  கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததுடன்   சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து  நிலைமைகளை அவதானித்திருந்தார்.  

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்  பிரேரணை ஒன்றை கொண்டு  வந்து நிறைவேற்றியிருந்தது.  அத்துடன்  அதன் பின்னர்  2012 ஆம் ஆண்டு முதல் கடந்த வருடம் வரை  இலங்கை  தொடர்பில்   இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்   நான்கு பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.