(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவிலிருந்து கடந்த 4 ஆம் திகதி பெற்றுக் கொள்ளப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள்  இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன. 

கொலன்னாவை - கொத்தொட்டுவ பிரதேசத்திலுள்ள மக்களுக்கு முதற்கட்டமாக இந்த தடுப்பூசி வழங்கப்பட்டது. 30 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இவை வழங்கப்பட்டன.

குறித்த பிரதேசத்தில அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையினால் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை இப்பிரதேசத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,

இவ்வருட இறுதிக்குள் 130 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்படும் என்று அதனை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது. 

இந்த தடுப்பூசியும் இரண்டு கட்டமாக வழங்கப்பட வேண்டும். முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் 3 வாரங்களின் பின் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க வேண்டும். 

எனவே ரஷ்யாவிடமிருந்து கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளை நாட்டில் 35 இலட்சம் மக்களுக்கு வழங்க முடியும்.

இலங்கையில் 135 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி வழங்க வேண்டிய தேவையுள்ளது. இவர்களில் ஒரு தொகுதியினருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசிகளை வழங்க முடியும். 

உலகில் இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசிகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்