2020 பெப்ரவரி இலங்கையில் கொரோனாத் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கு மேலாக அரசாங்க பாடசாலைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மூடிக் கிடப்பதையும் முறையான கல்விச்செயற்பாடுகள் இன்றி மாணவர்கள் வகுப்பேற்றப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையானது இந்த வருடம் சீராகும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள  3 முக்கிய காரணங்களினால் பின்னடைவு கண்டுள்ளது என்பதுடன் இன்னமும் சில வருடங்களுக்கும்  இதேநிலை தொடரக்கூடிய ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் 

தடுப்பூசி இந்த வருட ஆரம்பத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் இலங்கையை ஏனைய பல நாடுகளுடன் ஒப்பிடும்போது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள உரிய முன்நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மெதுவாக வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் குடித்தொகையில் நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நிலையை அடைவதற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்குவதற்கு பல மாத காலம் செல்லும் . 

வைரஸ் உருமாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு 

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில்  பாரிய  அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டதுடன் தடுப்பூசிகளும் வளர்ந்தவர்களை இலக்கு வைத்தே தயாரிக்கப்பட்டன . 

ஆனால்  உருமாற்றம் பெற்று தற்போது நாட்டில் பரவி வரும் வைரஸ் சிறுவர்களையும் தாக்கும் வல்லமை கொண்டதாக இருப்பதனால் பாடசாலை வகுப்பறைச்  சூழல் போன்ற ஒன்றுகூடல்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

சமூகப் பரவல் நிலையினால் ஏற்பட்டுள்ள பின்னடைவு 

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை வெளிநாட்டில் இருந்து வரும் நோய்த் தொற்றையும் உள்ளூரில் பரவிவரும் நோய்த்தொற்றையும் கட்டுப்படுத்த தவறிவிட்ட நிலையில் சமூகப்பரவல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்து மீள பல மாத காலம் செல்லும். 

இதன் காரணமாக நீண்ட காலம் பாடசாலைகள் மூடி இருக்கப்போகும்  நிலையில் மாணவர்களின் உடல் உள நலன்களை பேணும் ஆலோசனைகளுக்கு  அப்பால் மாணவர்களின் கல்விச்  செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பது எப்படி என்பதை தீவிரமாக சிந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. 

 

மேலைத்தேய வளர்ச்சியடைந்த நாடுகள் இலகுவாக இந்தப் பிரச்சினைக்கு  இணைய வழிக் கல்வியை மேம்படுத்தியதன் மூலமாக தீர்வு கண்டுள்ளார்கள். 

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்னமும் பல இடங்கள் இணைய ஆற்றல் எல்லைக்கு (internet coverage) அப்பால் இருப்பதுடன்  பல வறிய மாணவர்கள் இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தி கல்வியை பெறும் வசதி அற்று இருக்கிறார்கள். 

இதன் காரணமாக இணைய வசதிகள் உருவாகுவதற்கு முன்னர் வகுப்பறைகளுக்கு வராமல்  மாணவர்கள் தொலைநிலைக்கல்வி பெறுவதற்குரிய முறைகளை குறிப்பாக அஞ்சல் வழிக்கல்வி முறை  என்பது அமுல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தாலும் அனைத்து மாணவர்களும் பாகுபாடின்றி கல்வியை பெறுவதற்கு உரிய வழியாக பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

இந்த முறையின் படி வாராவாரம் ஆசிரியர்கள் பாடங்களுக்குரிய வினாக் கொத்தை  மாணவர்களுக்கு அனுப்புவார்கள். மாணவர்கள் பாடப்புத்தகங்களை படித்து வினாக்கொத்துக்குரிய  பதிலை சுய முயற்சியினால் எழுதி அனுப்புவதுடன், ஆசிரியர்கள் பதில்களுக்குரிய பின்னூட்டங்களை திருத்தி அனுப்புவார்கள். 

அசாதாரண சூழ்நிலையில் தியாக சிந்தையுடைய ஆசிரியர்கள் சிரமம் பாராது இந்தப் பணியை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

கல்வி அமைச்சு ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர் குழுக்களை அமைத்து  நாடளாவிய ரீதியில் செயல்படுத்தக்கூடிய வகையில் பாடத்திட்டத்தின்படி வாராவாரம் அனுப்பக்கூடிய வினாக்கொத்துக்களையும் பதில்களையும்  தயாரித்து கொடுத்தால் இதை இலகுவாக அமுல்படுத்தலாம்.

தபால் சேவைகள் சீராக இயங்காத இடங்களில் பாடசாலைகளில் பெட்டிகளை வைப்பதன் மூலம் மாணவர்கள் தமது கேள்வி பதில்களை பெற்றுக் கொள்ள முடியும். 

பழைய மாணவர் சங்கங்களும் ஏனைய நலன்விரும்பிகளும்  கேள்விக் கொத்துகளை அச்சடிப்பது போன்ற  மேலதிக செலவுகளை பொறுப்பெடுப்பதன் மூலமாகவும் அஞ்சல் வழிக் கல்வியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசுகளை வழங்குவதன் மூலமாகவும்  தமது பாடசாலைகளில்  கல்வி நிலையை மேம்படுத்த முடியும்.  

சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்கள் கற்க வேண்டிய தேவை இருப்பதனால் பெற்றோர்கள் வீட்டிலேயே தமது பிள்ளைகள் அஞ்சல் வழிக் கல்வியை கற்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.  

அதேவேளை அஞ்சல் வழிக் கல்வி மாணவர்கள் சுயமாக கல்வி கற்கும் ஆற்றலை மேம்படுத்துவதுடன் இந்த இருண்ட காலத்தில் இருந்து மீண்டு அறிவுடைய எதிர்கால சந்ததியினரை உருவாக்கவும் வழி சமைக்கும். 

பாதகமான இந்தக் காலகட்டத்தில் கல்விச் சமூகம் மீண்டும் சுமூக நிலை ஏற்படும்  வரை  செயல்படுத்துவதற்கு எனது  யோசனையை பரிசீலிக்க முன்வரவேண்டும்.